108என் சரித்திரம்

கிறேன்” என்று சொல்லித் தம்முடைய ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

      அது வரையில் அவர் என்னைப் பிரிந்து இருந்ததேயில்லை. அப்போது
எனக்குப் பிராயம் பன்னிரண்டுக்கு மேலிருக்கும். நான் அறிவு வந்த
பிள்ளையாக மற்றவர்களுக்குத் தோற்றினும், என் அன்னையாருக்கு மட்டும்
நான் இளங் குழந்தையாகவே இருந்தேன். தம் கையாலேயே எனக்கு
எண்ணெய் தேய்த்து எனக்கு வேண்டிய உணவளித்து வளர்த்து வந்தார். தமது
வாழ்க்கை முழுவதும் என்னைப் பாதுகாப்பதற்கும் என் அபிவிருத்தியைக்கண்டு
மகிழ்வதற்குமே அமைந்ததாக அவர் எண்ணியிருந்தார். தாயின் அன்பு
எவ்வளவு தூய்மையானது! தன்னலமென்பது அணுவளவுமின்றித் தன்
குழந்தையின் நலத்தையே கருதி வாழும் தாயின் வாத்ஸல்யத்தில்
தெய்வத்தன்மை இருக்கிறது.

      என் அன்னையார் என்னைத் தழுவிப் பிரிவாற்றாமையினால் உண்டான
வருத்தத்தைப் புலப்படுத்தியபோது அங்கு நின்ற பெண்மணிகள் சிரித்தார்கள்.
நான் ஒன்றும் விளங்காமல் பிரமித்து நின்றேன். நான் வந்த சில
தினங்களுக்குப் பிறகு என் தந்தையாரும் குன்னத்துக்கு வந்து சேர்ந்தார்.

வெண்மணிக்குச் சென்றது

      குன்னத்தில் இருந்தபோது மத்தியில் அதன் கிழக்கேயுள்ள
வெண்மணியென்னும் ஊரில் இருந்த செல்வர்கள் எங்களை அங்கே அழைத்துச்
சென்றனர். அவர்கள் விருப்பத்தின்படியே அங்கு அருணாசலகவி ராமாயணப்
பிரசங்கம் நடந்தது. அது நிறைவேறிய காலத்தில் என் தகப்பனாருக்கு இருபது
வராகன் சம்மானம் கிடைத்தது.

அமிர்த கவிராயர்

      வெண்மணிக்கு அமிர்த கவிராயரென்ற ஒருவர் ஒரு நாள் வந்தார்.
அப்போது அவருக்கு எழுபது பிராயமிருக்கும். அவர் அரியிலூர்ச் சடகோப
ஐயங்காரிடத்தும் அவருடைய தந்தையாரிடத்தும் சில நூல்களைப் பாடம்
கேட்டவர். பல நூல்களைப் படித்திராவிட்டாலும் படித்த நூல்களில்
அழுத்தமான பயிற்சியும் தெளிவாகப் பொருள் சொல்லும் ஆற்றலும் அவர்பால்
இருந்தன. சங்கீதப் பயிற்சியும் அவருக்கு உண்டு. அவர் இசையுடன் பாடல்
சொல்வது நன்றாக இருக்கும். அவரை நான் அரியிலூரிலிருந்த பொழுதே
பார்த்திருக்கிறேன்.