விவாக முயற்சி 113

கல்யாணக் கவலை

      வர வர எனது கல்வி அபிவிருத்தியடைந்து வருவதை என் தந்தையார்
கவனித்து வந்தார். என்னைப்பற்றிய ஞாபகமே அவருக்கு நாளுக்கு நாள்
அதிகமாயிற்று. என் கல்வியைப்பற்றிய முயற்சிகளைச் செய்து கொண்டு வந்த
அவருக்கு என் விவாகத்தைப் பற்றிய எண்ணமும் உண்டாயிற்று.
பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இளம் பருவத்திலேயே கல்யாணம்
செய்துவிடும் வழக்கம் அக்காலத்தில் அதிகமாகப் பரவியிருந்தது. ஒரு
குறிப்பிட்ட பிராயத்திற்குள் கல்யாணமாகாவிட்டால் பெரிய அகௌரவமென்று
கருதி வந்தார்கள்.

      எனக்குப் பதின்மூன்றாம் பிராயம் நடந்தபோதே என் தந்தையாருக்கு
என் விவாகத்தைப்பற்றிய கவலை உண்டாகி விட்டது. அக்காலத்தில்
பெண்ணுக்காகப் பிள்ளையைத் தேடும் முயற்சி பெரும்பாலும் இல்லை;
பிள்ளைக்காகப் பெண்ணைத் தேடும் முயற்சியே இருந்தது. “பெண்ணுக்கு
வயசாகி விட்டதே” என்ற கவலை பெற்றோர்களுக்கு இருப்பதில்லை; “எங்கே
இருந்தாவது ஒருவன் வந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு போவான்” என்ற
தைரியம் இருந்தது. பிள்ளையைப் பெற்றவர்களோ தங்கள் பிள்ளைகளுக்குத்
தக்க பருவம் வருவதற்கு முன்பே நல்ல இடத்தில் பெண் தேடி விவாகம்
செய்விக்கவேண்டுமென்ற கவலையுடன் இருப்பார்கள்.

      இத்தகைய கால நிலையில் என் தந்தையாரும் எனக்கு ஏற்ற
பெண்ணைத் தேடத் தொடங்கினர். கல்யாணத்தில் பிள்ளை வீட்டினருக்கே
செலவு அதிகம். குன்னத்தில் பெற்ற ஆதரவினால் ஊக்கமடைந்த என்
தந்தையாருக்கு முன்பெல்லாம் குடும்பக்கடனை அடைக்க வேண்டுமென்ற
நோக்கம் இருந்து வந்தது. நாளடைவில் அந்த நோக்கம் மாறி,
“நிலத்தையேனும் விற்றுக் கடனை அடைத்து விடலாம்; இவனுக்கு
எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட வேண்டும். வரும்
பணத்தை அதற்காகச் சேர்க்க வேண்டும்” என்ற எண்ணமே வலியுற்றது.
ஒருபால் பெண்ணைத் தேடும் முயற்சியும், ஒருபால் என் கல்யாணத்துக்குரிய
பொருளைத் தேடும் முயற்சியும் நடைபெற்று வந்தன. இந்த முயற்சிகளில்
தந்தையாரோடு என் சிறிய தந்தையாரும் சேர்ந்துகொண்டனர்.

களத்தூர் சென்றது

      பெரும்புலியூர்த் தாலுகாவிலுள்ள களத்தூரினராகிய
ராமையங்காரென்பவர் குன்னத்திற்கு அடிக்கடி வருவார். அவர்