122என் சரித்திரம்

      ஐயாவையர் தஞ்சாவூருக்குக் கிழக்கேயுள்ள திட்டையில் கர்ணமாக
இருந்தார். அவருடைய மூத்த குமாரர் கணபதி ஐயர் அவர்கள் எங்களைக்
காட்டிலும் நல்ல நிலைமையுடையவர்கள். பூஸ்திதியும் உண்டு; அவர்கள் வீடு
ஒன்றுதான் அவ்வூரில் அக்காலத்தில் மாடிவீடாகக் கட்டப்பட்டிருந்தது; அதற்கு
‘மாடியாம்’ (மாடியகம்) என்று பெயர். என் தந்தையாருடைய சிவ பக்தியும்
நல்லொழுக்கமும் புகழுமே அவர்களைக் கவர்ந்தன. அதனால் இந்த விவாகம்
செய்வதில் அவர்கள் பூரணமான திருப்தி உடையவர்களாக இருந்தார்கள்.

சிதம்பர உடையார் செய்த உதவி

      விவாகச் செலவுக்கு இருநூறு ரூபாயும், கூறைச் சிற்றாடை
முதலியவற்றிற்காக முப்பத்தைந்து ரூபாயும், நகைக்காக ரூபாய் நூற்றைம்பதும்
என் தந்தையார் கணபதி ஐயரிடம் அளிப்பதாக வாக்களித்தார். மேலும்
கிருகப்பிரவேசம் முதலியவற்றிற்குரிய செலவுக்கு வேறு பணம்
வேண்டியிருந்தது. தம் கையிலிருந்த பணத்தையும் ஆகவேண்டிய செலவையும்
கணக்கிட்டுப் பார்த்தபோது பின்னும் நூற்றைம்பது ரூபாய் இருந்தால்
கஷ்டமில்லாமல் இருக்குமென்று என் தந்தையாருக்குத் தோற்றியது. பின்பு
மறவனத்தம் சென்று சிதம்பர உடையாரை அணுகி இவ்விஷயத்தைக் கூறினார்.
என் விவாகம் நிச்சயமானது தெரிந்து அவர் மிக்க சந்தோஷமடைந்ததோடு,
“பணத்தைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நடராஜ மூர்த்தியின்
திருவருளைப்பெற்ற தங்களுக்கு எது தான் கிடைக்காது?” என்று சொல்லித்
தந்தையாரைத் தம்முடைய எலுமிச்சந்தோட்டத்திற்கு அழைத்துச் சொன்றார்.
அவர் தம் மடியில் வைத்திருந்த தம் பாக்குப் பையை எடுத்தார். அதிலிருந்து
நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து, “இதை வைத்துத் கொள்ளுங்கள்.
முகூர்த்தத்தின்போது ஐம்பது ரூபாய் தருகிறேன். இன்னும் வேண்டியிருந்தாலும்
கொடுக்கிறேன்” என்றார். அதைப் பெற்றுக் கொண்டு கல்யாணத்திற்கு வந்து
சிறப்பிக்க வேண்டுமென்று எந்தையார் அவரிடம் கூறினார். “அவசியம் வந்து
சேருகிறேன். என் தந்தையாருக்குத் திதி வருகிறது. அதை நடத்தி விட்டுப்
புறப்பட்டு வருகிறேன். வரும்போது பணம் கொண்டு வருகிறேன். தாங்கள்
கவலைப்படவேண்டாம். சந்தோஷமாகப் போய் வாருங்கள்” என்று உடையார்
விடையளித்தார்,

      எந்தையார் என்னையும் தாயாரையும் களத்தூரிலிருந்து அழைத்துக்
கொண்டு உத்தமதானபுரம் வந்து சேர்ந்தார்.