என் கல்யாணம் 127

      இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும் வைத்துவிடுவார்கள். பொடி
மட்டையும் வைப்பதுண்டு. சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி
உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள்.

     அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு நிவேதனமான பழங்களும்,
சுண்டல் வடைப்பருப்பு மோதகம் முதலியவைகளும் விநியோகம் செய்யப்படும்.
மோதகம் ஒரு மாம்பழ அளவு இருக்கும். ஒவ்வொரு பொருளையும் இன்னார்
இன்னாரே விநியோகிக்க வேண்டுமென்ற வரையறை உண்டு. அவர்கள்
ஊரிலிருக்கும் காலங்களில் அந்த விநியோகத்தைத் தவறாமற் செய்து
வருவார்கள். இந்த நிறை பணியோடு எங்கள் வீட்டிலும் பெண் வீட்டிலும் குல
தெய்வ சமாராதனைகளும் நடைபெற்றன.

      என் கல்யாணம் அக்காலத்திற்கேற்ப விமரிசையாகவே நடை பெற்றது.

      குளங்களிலும் வாய்க்கால்களிலும் நிறைய ஜலம் இருந்தது. ஆதலின்
விருந்தினர்களது ஸ்நானம் முதலிய சௌகரியங்களுக்குக் குறைவு நேரவில்லை.

      நலங்கு நடைபெற்றபொழுது நானே பத்தியங்கள் சொன்னேன்.
அவற்றை என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எனக்குச் சொல்லித்
தந்தார். எங்கள் குலகுருவாகிய ஐயா வாத்தியாரென்பவர் எல்லா வைதிக
காரியங்களையும் முறைப்படி நடத்தி வைத்தார்.

சிதம்பர உடையார் வருகை

      விபவ வருஷம் ஆனி மாதம் 4-ம் தேதி (16-6-1868) என் விவாகம்
நடந்தது. அன்று இரவு மறவனத்தம் சிதம்பர உடையார் குதிரை மீது ஏறி
வந்து சேர்ந்தார். அவர் விவாகத்துக்கு முதல் நாளே வந்திருப்பார். அவர்
தந்தையாருக்கு அன்று திதி யாகையால் அதைச் செய்துவிட்டு விவாக
தினமாகிய மறுநாட் காலையிலே புறப்பட்டு இரவு மாளாபுரம் வந்தார்.
வந்தவுடனே என் தந்தையாரைக்கண்டு தாம் முன்பே வாக்களித்திருந்தபடி
ஐம்பது ரூபாய் அளித்தார். தக்க சமயத்தில் அவர் செய்த உபகாரத்தைப்
பெற்று என் தந்தையார் மிக்க நன்றி பாராட்டினார்.

      அவர் குதிரையின்மீது ஏறிவந்து இறங்கியபோது அவர் ஒரு பெரிய
செல்வரென்பதைக் கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள்