128என் சரித்திரம்

      அறிந்து கொண்டனர். அவர் கலகலவென்று பணத்தை எடுத்துக்
கொடுத்தபோது எல்லாரும் ஆச்சரியமுற்றனர். என் தந்தையார் மிக்க
செல்வாக்குடையவரென்ற எண்ணம் அவர்களுக்கு அப்போது உண்டாயிற்று.
அரியிலூர் முதலிய இடங்களிலிருந்தும் சில வேளாளச் செல்வர்கள்
வந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச்
செய்தார்கள். அவரவர்களுக்கு ஏற்றபடி உபசாரங்கள் நடைபெற்றன.
எந்தையாரிடம் அவர்கள் காட்டிய மரியாதையைக் கண்ட என் மாமனாரும்
அவரைச் சார்ந்தவர்களும், ”நல்ல இடத்தில்தான் நாம் சம்பந்தம்
செய்திருக்கிறோம். பெரிய மனுஷர்களெல்லாம் இவருக்குப் பழக்கமாக
இருக்கிறார்கள். நம் மாப்பிள்ளைக்குக் குறைவு ஒன்றும் இல்லை” என்ற
தைரியத்தை அடைந்தார்கள்.

கிருகப் பிரவேசம்

கல்யாணம் நான்கு நாள் நடைபெற்றது.

      ஐந்தாம்நாள் மாலையில் உத்தமதானபுரத்தில் எங்கள் வீட்டில்
கிருகப்பிரவேசம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று புறப்பட வேண்டிய
சமயத்தில் இடியுடனும் மின்னலுடனும் பெரிய மழை வந்துவிட்டது. நாங்கள்
மாளாபுரத்திலிருந்து புறப்பட்டு உத்தமதானபுரம் செல்ல வேண்டும். பெண்
வீட்டுக்காரர்கள் மழையிற் புறப்பட்டுப் போகக்கூடாது என்றனர். மழை
நின்றபிறகும் செல்வதைத் தடுத்தனர். என் தகப்பனாரோ மிகவும் விரிவான
ஏற்பாடுகளைச் செய்திருந்தார்; விசேஷமான உணவு வகைகளைச் சித்தம்
செய்வித்திருந்தார். அவ்வளவும் வீணாகிவிடுமேயென்று அவர்
கவலைப்பட்டார்.

      கல்யாணத்துக்கு வந்தவர்களுள் தியாகசமுத்திரம் விசுவநாத
சாஸ்திரிகளென்பவர் ஒருவர். அவர் சிறந்த ஸம்ஸ்கிருத வித்துவான். ஜில்லா
ஜட்ஜாக இருந்த பர்னல் துரை என்னும் ஐரோப்பிய கனவானுக்கு ஸம்ஸ்கிருத
பாடம் கற்பித்து வந்தவர்; ஜோதிஷ சாஸ்திரத்திலும் அவருக்குப் பழக்கம்
இருந்தது. அவர் என் தந்தையாருக்கு நண்பர். அவரிடம் என் தந்தையார்
“மழை வந்து நின்றுவிட்டதே; இப்போது பிரயாணப்படக் கூடாதா?” என்று
கேட்டார். அவர், “அதனால் ஒன்றும் கெடுதி இல்லை. நல்லதுதான்” என்று
கூறினர். பெண் வீட்டுக்காரர்களிற் சிலர் அப்போது மறுத்துக் கூறினர். உடனே
சாஸ்திரிகள் பல வடமொழிச் சுலோகங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச்
சொல்லி, “மழை வந்தது நல்ல சகுனமே; புறப்படுவது நன்மையே” என்று