134என் சரித்திரம்

      பயிரிட்டிருக்கும் செடி கொடிகளைப் பாதுகாப்பதில் உதவி புரிவேன்;
வேலி கட்டுவேன்; ஜலம் இறைப்பேன்; காய்களைப் பறிப்பேன். என் மாமனார்
வீட்டினர் பார்க்கும்போது பின்னும் சுறுசுறுப்பாக அவற்றைச் செய்வேன்;
‘படித்துச் சோம்பேறியாகி விட்டான்’ என்று எண்ணாமல், ‘கருத்துள்ள பிள்ளை;
பிழைத்துக் கொள்வான்’ என்று அவர்கள் எண்ண வேண்டுமென்பது என்
நினைவு. இத்தகைய சிறு வேலைகளை இளமை முதலே செய்து வருவது
கிராமத்தாருக்கு இயல்பு. உடம்பு வளைந்து வேலை செய்வது அகௌரவம்
என்ற எண்ணம் அக்காலத்தில் அதிகமாகப் பரவவில்லை.

தந்தையார் சிவ பூஜை

      அப்பால் நாங்கள் சூரியமூலை சென்று சில நாள் தங்கினோம். அங்கே
என் பிதா என் மாதாமகரிடம் ஸ்படிக லிங்க பூஜையை எழுந்தருளச் செய்து
கொண்டார். அந்தச் சிவலிங்கப் பெருமானுக்கு மீனாட்சி சுந்தரேசுவரரென்பது
திருநாமம். குடும்பத்துக்குரிய பூஜையை அதுகாறும் செய்து வந்த எந்தையார்
அக்கால முதல் சிவ பூஜையை விரிவாகச் செய்யத் தொடங்கினர். என்
பாட்டனாரைப் போலவே அபிஷேகத்துக்குப் பாலும் அருச்சனைக்கு வில்வமும்
இல்லாமற் பூஜை செய்வதில்லை என்ற நியமத்தை மேற்கொண்டார். சிவ
பூஜையில் வரவர அதிகமாக அவர் ஈடுபடலானார். தம் பூஜையில்
நிவேதனமான அன்னத்தையன்றி வேறு அன்னத்தை உண்ணும் வழக்கத்தை
நிறுத்திக்கொண்டார்.

      இராமாயணப் பிரசங்கத்தில் அவர் தம் வாழ்க்கையில் பல வருஷங்கள்
ஈடுபட்டவர். இராமபிரானுடைய அரிய குணங்கள் அவர் நெஞ்சத்தை
உருக்கின. ஆயினும் சிவபெருமானிடத்து அவருக்கு உண்டான தீவிரமான
பக்தி இராமபிரானிடம் உண்டாகவில்லை. இராமபிரானை எல்லாக்
குணங்களும் நிறைந்த மூர்த்தியாக எண்ணி வழிபடுவதில் அவர்
குறைவதில்லை. ஆயினும் அவர் தம் இருதய அந்தரங்கத்தைச் சிவபிரானுக்கே
உரிமையாக்கினர். அவருடைய வாழ்க்கையின் முற்பகுதியில் அவருடைய
சங்கீதத் திறமை அவர் புகழுக்கும் மதிப்புக்கும் காரணமாக நின்றது.
பிற்பகுதியில் அவருடைய சிவ பூஜையும் சிவ பக்தியும் அவருடைய மதிப்புக்கு
முக்கிய காரணமாயின. கோபம், உறவினர்களிடத்தில் ஒரு வகையான வெறுப்பு
முதலிய குறைகளும், விடா முயற்சி, கஷ்டங்களைச் சகிக்கும் தன்மை, சங்கீதத்
திறமை என்னும் குணங்களும் அவர்பால் இருந்தன. ஆனால் அவரைப்பற்றி
நினைக்கும் போதெல்லாம் இந்தக் குறைகளையும் நிறைகளையும் கடந்து நின்று
முதலில் ஞாபகத்திற்கு வருவது அவரது சிறந்த சிவ பக்திச் சிறப்பேயாகும்.