ஏக்கமும் நம்பிக்கையும் 135

அரும்பாவூர் நாட்டார்

      சில காலத்துக்குப் பிறகு சூரிய மூலையிலிருந்து நேரே குன்னத்திற்கு
நாங்கள் வந்து சேர்ந்தோம். என் தந்தையார் வழக்கம் போலவே காலக்ஷேபம்
செய்து வந்தார். எனக்குப் பழைய உத்ஸாகம் சிறிது சிறிதாகக் குறைந்து வந்தது.
படித்த பழம் புஸ்தகங்களைத் திருப்பித் திருப்பிப் படித்து வந்தேன். ஆனாலும்
திருப்தி பிறக்கவில்லை. புதிய முயற்சி செய்வதற்கும் வழியில்லை.
இப்படியிருக்கையில் ஒரு நாள் பெரும்புலியூரைச் சார்ந்த அரும்பாவூரிலிருந்த
நாட்டாராகிய பெருஞ் செல்வரொருவர் அரியிலூருக்குப் போகும் வழியில்
குன்னத்தில் எங்கள் ஜாகையில் தங்கினர். அவர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்களுடைய நண்பர். தமிழ்ப் பயிற்சி உடையவர்.

      அவர் என்னோடு பேசிவருகையில் எனக்கிருந்த தமிழாசையை
உணர்ந்தார் பிள்ளையவர்களுடைய பெருமையை அவர் பலபடியாக விரித்து
உரைத்தார். என் தந்தையாரைப் பார்த்து, “தமிழில் இவ்வளவு ஆசையுள்ள
உங்கள் குமாரரை வீணாக இச்சிறிய ஊரில் ஏன் வைத்திருக்கிறீர்கள்?
பிள்ளையவர்களிடத்தில் கொண்டு போய் விட்டுவிட்டால் இவர் நன்றாகப்
படித்து விருத்திக்கு வருவாரே இப்படியே இவர் இருந்தால் ஏங்கிப் போய்
ஒன்றுக்கும் உதவாதவராகி விடுவாரே. இப்படி வைத்திருப்பது எனக்குத்
திருப்தியாக இல்லை” என்றார்.

      “அவரிடம் கொண்டு போய் விட்டால் அவர் பாடம் சொல்லித்
தருவாரென்பது என்ன நிச்சயம்?” என்று என் தந்தையார் கேட்டார்.

      “என்ன அப்படிக் கேட்கிறீர்களே! அவர்களிடத்தில் எவ்வளவு பேர்
கற்றுக் கொள்ளுகிறார்கள்! எவ்வளவு பேர் பாடங் கேட்டு நல்ல நிலைக்கு
வந்திருக்கிறார்கள்! பாடம் சொல்வதைப் போல அவர்களுக்கு விருப்பமான
செயல் வேறொன்றும் இல்லை. இப்போது அவர்கள் நாகபட்டினத்தில் அந்த
ஸ்தலபுராணம் அரங்கேற்றி வருகிறார்கள். நான் போய் ஒரு மாதம் இருந்து
விட்டு வந்தேன் அவர்களிடம் எப்போதும் சில மாணாக்கர்கள் பாடம் கேட்டுக்
கொண்டே இருப்பார்கள்.”

      “எல்லாம் சரி தான். ஆனாலும் இவனைத் தனியே அனுப்புவதற்கு என்
மனம் துணியவில்லை. தவிர அவர்களிடம் சென்றிருந்தால் ஆகாரம் முதலிய
சௌகரியங்களுக்குத் திரவியம் வேண்டுமே.