188என் சரித்திரம்

      மற்றக் காலங்களில் அப்புலவர் சிகாமணிக்கு அருகிலேயே இருந்து
வந்தேன்; அருகிலே உறங்கி வந்தேன். அப்படிப் பழகுதலிலே ஒரு தனி
இன்பத்தை நான் அடைந்தேன்.

பெயர் மாற்றம்

      நான் இவ்வாறு பாடம் கேட்டு வந்தபோது ஒருநாள் ஏதோ
விசாரிக்கையில் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “உமக்கு ‘வேங்கடராமன்’
என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டார். நான், “வேங்கடாசலபதி
குல தெய்வமாதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக் கடவுள்
பெயரையே கொள்வது வழக்கம்” என்பதைத் தெரிவித்தேன். வேங்கடராமன்
என்ற பெயரை அவர் விரும்பவில்லையென்று எனக்குக் குறிப்பாகப்
புலப்பட்டது.

      “உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா?” என்று அவர் கேட்டார்.

      “எங்கள் வீட்டில் என்னை ‘சாமா’ என்று அழைப்பார்கள்” என்றேன்.

      “அப்படி ஒரு பெயர் உண்டா, என்ன?”

      “அது முழுப் பெயரன்றே! சாமிநாதனென்பதையே அவ்வாறு மாறி
வழங்குவார்கள்.”

      “அப்படியா? சாமிநாதன் என்ற பெயர் எவ்வளவு நன்றாக இருக்கிறது!
உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாமென்று எண்ணுகிறேன். நீரும்
இனிமேல் அப்பெயரையே சொல்லிக் கொள்ளும்” என்று அவர் சொன்னார்.

      நான் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன். வேங்கடராமனாக
இருந்த நான் அன்று முதல் சாமிநாதனாகி விட்டேன். பிள்ளையவர்கள்
விருப்பத்தின்படி எல்லோரும் சாமிநாதன் என்ற பெயரையே வழங்கலாயினர்.
அன்புகனிந்த அவர் உள்ளத்திற்கு உவப்பைத் தந்த அப்பெயரே எனக்கு
நிலைத்து விட்டது.

      என் பெயர் மாறின சில நாட்கள் வரையில் எனக்குச் சிறிது கஷ்டமாக
இருந்தது. “சாமிநாதையர்” என்று யாராவது என்னை அழைத்தால் நான்
என்னைத்தான் அப்படி அழைக்கிறார்கள் என்பதை உடனே உணர்ந்து
கொள்ளவில்லை. என் காது வேங்கடராமன் என்றும் சாமா என்றுமே கேட்டுப்
பழகியிருந்தது. யாரேனும் என் பெயரைக் கேட்டால் வேங்கடராமன் என்று