தமிழே துணை 193

சீகாழிக் கோவை

      தமிழ்ப்பாடம் தினந்தோறும் நடைபெற்று வந்தது. பிரபந்தங்கள்
பலவற்றை முறையே கேட்டுவந்தேன். ஒரு நாள் என் ஆசிரியர் பாடம்
சொல்லி வரும்போது, “காஞ்சிப் புராணத்தை நீர் பாடம் கேட்கலாம்; நல்ல
நூல். பல அரிய விஷயங்களை அதனால் தெரிந்து கொள்ளலாம்” என்றார்கள்.
அவருக்கு அப்புராணத்தில் அதிக விருப்பமுண்டு. என்ன காரணத்தாலோ
பின்பு அதைத் தொடங்கவில்லை.

      “கோவை நூல் ஏதாவது நீர் வாசித்திருக்கிறீரா?” என்று பின்பு
பிள்ளையவர்கள் கேட்டார்கள்.

      “திருக்கோவையாரும் தஞ்சைவாணன் கோவையும் படித்திருக்கிறேன்”
என்று விடை கூறினேன்.

      “இப்போது சீகாழிக் கோவை பாடம் கேட்கலாம்” என்று அவர்
சொன்னார்.

      “அக்கோவையில் ஒரு செய்யுள் எனக்கு முன்பே தெரியும்” என்றேன்.

      “எப்படி உமக்குத் தெரியும்?”

      “என் சிறிய தந்தையார் முன்பு ஒரு முறை இவ்வூருக்கு வந்த போது
ஐயா அவர்களைப் பார்க்க வந்தாராம். அப்பொழுது ஐயா அவர்கள் சிலருக்குச்
சீகாழிக் கோவையைப் பாடம் சொல்லி வந்ததை அவர் சிறிது நேரம் இருந்து
கவனித்தாராம். ஐயா அவர்கள் பாடம் சொல்லியபோது ‘அற்றேமலர்க் குழல்’
என்ற செய்யுளைச் சொல்ல என் சிறிய தந்தையாருக்கு அது மனப்பாடமாகி
விட்டது. அவர் ஊருக்கு வந்து என்னிடம் இச்செய்தியைச் சொல்லியதோடு
செய்யுளையும் சொன்னார். நான் அதை அப்போதே பாடம் செய்து
கொண்டேன்” என்று சொல்லி அச் செய்யுளையும் கூறினேன்.

      “அப்படியா! அந்நூல் முழுவதையும் நீர் பாடம் கேட்டு விடலாம்”
என்று கூறினார்.

      நான் பாடம் கேட்பதற்கு அக்கோவையின் பிரதி கிடைக்கவில்லை.
பிள்ளையவர்களிடம் இருந்த பிரதி வேறொருவர் வசம் இருந்தது. “கூறை
நாட்டுக் கனகசபை ஐயரிடம் பிரதி இருக்கிறது: ஆனால் அதை அவர் எளிதில்
கொடுக்கமாட்டார். வேறு யாரிடமாவது இருக்கும்; வாங்கித் தருகிறேன்” என்று
அவர் சொன்னார்.