அவர் செய்யுள் செய்யப் பழகுபவருக்கு இன்ன இன்ன முட்டுப்பாடுகள் நேருமென்பதை நன்றாக அறிவார். எங்களுக்கு அத்தகைய இடையூறுகள் நீங்கும் வழியைப் போதிப்பார். செய்யுள் இயற்றும் வழி “செய்யுள் செய்வதற்கு முன் எந்த விஷயத்தைப் பற்றிச் செய்யுள் இயற்ற வேண்டுமோ அதை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். எந்த மாதிரி ஆரம்பித்தால் கஷ்டமாக இராதோ அதை அறிந்து கொள்ள வேண்டும். பாட்டில் எதுகையில் இன்னதை அமைக்க வேண்டுமென்பதை வரையறுத்துக் கொண்டு அதற்கேற்ற எதுகையை வைக்க வேண்டும். மனம் போனபடி ஆரம்பித்து அதற்கேற்றபடி அடிகளைச் சரிப்படுத்துவது கூடாது. முதல் அடியில் அமைக்க வேண்டிய பொருளை மாத்திரம் யோசித்துத் தொடங்கி விட்டு நான்காவது அடிக்கு விஷயமோ வார்த்தைகளோ அகப்படாமல் திண்டாடக் கூடாது. நான்கு அடிகளிலும் தொடர்ச்சியாக அமையும் அமைப்பை நிச்சயித்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறுவார். ஒரு நாள் மாலையில் அவர் அனுஷ்டானத்தை முடித்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். நானும் கனகசபை ஐயரும் சவேரிநாத பிள்ளையும் அருகில் நின்றோம். அப்போது அவர் எங்களை நோக்கி, “உங்களுக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டா?” என்று கேட்டார். மற்ற இருவர்களும் பிள்ளையவர்களிடத்திற் பல நாட்களாகப் பாடம் கேட்டுப் பழகியவர்கள். அவர்கள் “உண்டு” என்று சொன்னார்கள். நான் இந்த மகா கவியினிடத்தில் “நமக்கும் செய்யுளியற்றத் தெரியும் என்று சொல்வது சரியல்லவே?” என்று முதலில் எண்ணினேன். ஆனாலும், மற்றவர்கள் தமக்குத் தெரியுமென்று சொல்லும்போது நான் மட்டும் சும்மா இருப்பதற்கு என் மனம் இடங் கொடுக்கவில்லை. ஆதலால், “எனக்கும் தெரியும்” என்று சொன்னேன். “ஏதாவது ஒரு பாட்டின் ஈற்றடியைக் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பூர்த்தி செய்ய முடியுமா?” என்று ஆசிரியர் கேட்டார். “முயன்று பார்க்கிறோம்” என்றோம். உடனே அவர் எங்கள் மூவருக்கும் மூன்று வெண்பாக்களுக்குரிய ஈற்றடிகளைக் கொடுத்தார். சவேரிநாத பிள்ளை கிறிஸ்தவர்; ஆகையால் அவருக்கு ஏற்றபடி, “தேவாவெனக்கருளைச் செய்” |