210என் சரித்திரம்

      பிள்ளையிடம், “குட்டிகள் மடத்தில் இருப்பதற்குக் காரணம் என்ன?”
என்று கேட்டேன். அதற்கு அவர் முதலில் சிரித்து விட்டு ‘சிறிய
தம்பிரான்களை மடத்தில் குட்டித் தம்பிரான்கள் என்று சொல்வார்கள். அந்தப்
பெயரையே சுருக்கிக் ‘குட்டிகள்’ என்று வழங்குவதுமுண்டு” என்று
விளக்கமாகக் கூறினார். என் சந்தேகமும் நீங்கியது.

      “திருவாவடுதுறையிலே போய் இருந்தால் இடைவிடாமற் பாடம்
சொல்லலாம். அடிக்கடி வித்துவான்கள் பலர் வருவார்கள்; அவர்களுடைய
பழக்கம் உண்டாகும். சந்நிதானத்தின் சல்லாபம் அடிக்கடி கிடைக்கும்
அதைவிடப் பெரிய லாபம் என்ன இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மேலாக
இந்தப் பிள்ளைகளுக்கு ஆகார வசதிகள் முதலியன கிடைக்கும்” என்று
பிள்ளையவர்கள் சொன்னார்கள். அவர் மாணாக்கர்களுடைய
சௌகரியத்தையே முதல் நோக்கமாக உடையவர் என்பது அவ்வார்த்தைகளால்
புலப்பட்டது.

      இந்நிகழ்ச்சி ஆனி மாதத்தில் நடந்தது. அது முதல் “இந்த மகா
வித்துவானுடைய மதிப்புக்கும் பாராட்டுக்கும் உரிய அந்தச் ‘சந்நிதானம்’ சிறந்த
ரஸிகராகவே இருக்கவேண்டும்” என்று நான் நினைக்கலானேன்.
திருவாவடுதுறை ஆதீனத்தின் பெருமையையும் அதன் தலைவர்களாக உள்ள
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரது மேன்மையையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்த என்
மனத்துள் “திருவாவடு துறைக்கு எப்பொழுது போவோம்!” என்ற ஆவல்
உண்டாயிற்று.

ஆறுமுகத்தா பிள்ளை

      ஒரு நாள் பட்டீச்சுரத்திலிருந்து ஆறுமுகத்தா பிள்ளை என்ற
சைவவேளாளப் பிரபு ஒருவர் வந்தார். அவர் பிள்ளையவர்களைத் தெய்வமாக
எண்ணி உபசரிப்பவர். பிள்ளையவர்கள் அடிக்கடி பட்டீச்சுரம் சென்று சில
தினங்கள் அவர் வீட்டில் தங்கியிருந்து வருவது வழக்கம்.

      பிள்ளையவர்கள் செல்வாக்கை நன்கு உணர்ந்த ஆறுமுகத்தா பிள்ளை
தம்முடைய குடும்பத்தில் உள்ள துன்பங்கள் சிலவற்றை அப்புலவர்
பெருமானைக் கொண்டு நீக்கிக் கொள்ளலாம் என்றெண்ணி அவரை
அழைத்துச் செல்வதற்கு வந்திருந்தார். என் ஆசிரியர் ஆறுமுகத்தா
பிள்ளையிடம் விசேஷமான அன்பு காட்டி வந்தார். அதனால் அவருடைய
வேண்டுகோளைப் புறக்கணியாமல் பட்டீச்சுரம் புறப்பட நிச்சயித்தார்.