சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் 211

திருவாவடுதுறைப் பிரயாணம்

      “திருவாவடுதுறைக்குப் போய்ச் சந்நிதானத்திடம் விடை பெற்று
அங்கிருந்து பட்டீச்சுரம் போகலாம்” என்று சொல்லி என்னையும் தவசிப்
பிள்ளைகளில் ஒருவரான பஞ்சநதம் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு
ஆறுமுகத்தா பிள்ளையுடன் ஆசிரியர் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார்.
திருவாவடுதுறை மாயூரத்திலிருந்து சற்றேறக்குறையப் பத்து மைல் தூரம்
இருக்கும். ஆறுமுகத்தா பிள்ளை ஒரு வண்டி கொணர்ந்திருந்தார். நாங்கள்
எல்லோரும் அவ்வண்டியில் ஏறிக்கொண்டு சென்றோம். சில நேரம் வழியில்
நடந்து செல்வது உண்டு. பிராயாணத்திற் பிள்ளையவர்கள்
திருவாவடுதுறையைப் பற்றிப் பல செய்திகளை என்னிடம் சொன்னார்.

      “சந்நிதானம் உம்மைப் பார்த்துச் சில கேள்விகள் கேட்டாலும் கேட்கும்;
சில செய்யுட்களைச் சொல்லும்படி கட்டளையிடலாம்; நீர் நன்றாக இசையுடன்
செய்யுட்களைச் சொல்லும்; சந்நிதானத்திற்கு இசையில் விருப்பம் அதிகம்.
பொருள் கேட்டால் அச்சமின்றித் தெளிவாகச் சொல்லும். சந்நிதானம்
உம்மிடத்தில் பிரியம் வைத்தால் உமக்கு எவ்வளவோ நன்மைகள் உண்டாகும்”
என்று கூறினார்.

      வழியில் எதிரே வருபவர்கள் பிள்ளையவர்களைக் கண்டு மரியாதையாக
ஒதுங்கிச் சென்றார்கள். நாங்கள் திருவாவடுதுறையின் எல்லையை
அணுகினோம். அங்கே சந்தித்தவர்கள் யாவரும் அவரைக் கண்டவுடன்
முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள். சந்தோஷ மிகுதியால் அவரைச்
சுற்றிக்கொண்டு க்ஷேமம் விசாரித்தார்கள். மடத்தைச் சேர்ந்த ஓதுவார்களிற்
சிலர் பிள்ளையவர்கர் வரவை உடனே சுப்பிரமணிய தேசிகரிடம்
தெரிவித்தனர். தேசிகள் அவரை அழைத்து வரும்படி சொல்லியனுப்பினார்.

சுப்பிரமணிய தேசிகர் தோற்றம்

      நாங்கள் மடாலயத்துள் சென்றோம். மடத்தின் உட்புறத்தில் ஒடுக்கத்தின்
வடபுறத்தே தென்முகம் நோக்கியபடி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்
அமர்ந்திருந்தார். மடத்தில் பண்டார சந்நிதிகள் இருக்குமிடத்திற்கு ‘ஒடுக்கம்’
என்று பெயர். சுப்பிரமணிய தேசிகருடைய தோற்றத்திலே ஒரு வசீகரம்
இருந்தது. நான் அதுகாறும் அத்தகைய தோற்றத்தைக் கண்டதே இல்லை.
துறவிகளிடம் உள்ள தூய்மையும் தவக்கோலமும் சுப்பிரமணிய தேசிகரிடம்
நன்றாக