கனம் கிருஷ்ணையர் 25

      பெற்றுத் தம் வாழ்வு முழுவதும் அந்த ஸமஸ்தானத்துக்கு
வித்துவானாகவே விளங்கி வந்தார். இவர் தமிழில் கீர்த்தனங்களை இயற்றும்
சக்தியும் பெற்றிருந்தார்.

      திருவையாற்றுக்கு இவர் ஒரு முறை சென்ற காலத்தில் ஸ்ரீ
தியாகையரைச் சந்தித்து அவருடைய விருப்பத்தின்படி அடாணா ராகத்தில்,
“சும்மா சும்மா வருகுமா சுகம்” என்னும் கீர்த்தனம் ஒன்றை இயற்றியிருக்கிறார்.

      இவருடைய பெருமையினால் சிலருடைய பொறாமைத் தீ மூண்டு எரியத்
தொடங்கியது. யாரோ சிலர் உடையார் பாளையம் ஜமீன்தாரிடம்
இவரைப்பற்றிக் குறை கூறி அவரது மனம் சிறிது சலிக்கும்படி செய்து விட்டார்.
அந்த ஜமீன்தார் கச்சிரங்கப்பருடைய குமாரராகிய கக்சிக் கல்யாணரங்க
உடையாரென்பவர்.

      ஒரு நாள் கனம் கிருஷ்ணையர் வழக்கம்போல் ஜமீன்தாரைப் பார்க்கப்
போனபோது அவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. ஏதோ வேலையாக
இருப்பவரைப்போல் இருந்தார். அறிவாளியாகிய இந்தச் சங்கீத வித்துவானுக்கு,
‘இது யாரோ செய்த விஷமத்தின் விளைவு’ என்று தெரிந்து விட்டது. இவர்
மனம் வருந்தியது. ஆனாலும் அதைத் தாம் தெரிந்து கொண்டதாக அறிவித்து
விட வேண்டுமென்று விரும்பினார்.

      தம்முடைய மனவருத்தத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பது இவருக்கு
உசிதமாகப் படவில்லை. குறிப்பாகத் தெரிவிக்க எண்ணினார். சங்கீதமும்
சாகித்தியமும் இவருக்கு எந்தச் சமயத்திலும் ஏவல் புரியக் காத்திருந்தன. ஒரு
நாயகி பாடுவதாகப் புதிய கீர்த்தனம் ஒன்றைப் பாட ஆரம்பித்தார்.

      “பத்துப்பை முத்துப்பை வஜ்ரப் பதக்கமும்
     பைபையாப் பணத்தைக் கொடுத்தவர் போலப்
     பாடின பாட்டுக்கும் ஆட்டுக்கும் நீரென்னைப்
     பசப்பின தேபோதும் பலனறி வேன்காணும்”

      என்று சுருட்டி ராகத்தில் ஒரு பல்லவியை எடுத்தார்.

      ஜமீன்தார் திடுக்கிட்டுப் போனார். இந்தச் சுருட்டி ராகம் அவர்
உள்ளத்தைச் சுருட்டிப் பிடித்தது. கனம் கிருஷ்ணையர் நினைத்திருந்தால்
பெரிய ஸமஸ்தானங்களில் இருந்து ராஜபோகத்தில் வாழலாமென்பதை அவர்
அறிந்தவர். தம்முடைய சம்மானத்தை எதிர்பாராமல் அன்பை மாத்திரம்
விரும்பி உடையார்பாளையத்தில் இருப்பதும் ஜமீன்தாருக்கு நன்றாகத் தெரியும்.
இந்த எண்ணங்