புலமையும் அன்பும் 273

     “நாச்சலிக்காமல் பாடும் உங்கள் பெருமையை நேற்று இரவு நன்றாகத்
தெரிந்து கொண்டோம்”

      “கை சலிக்காமல் கொடுக்கும் ஸந்நிதானத்தின் கொடையினால் தான்
எல்லாம் பிரகாசப்படுகின்றன.”

      புலவரும் புரவலரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு
அளவுண்டோ? அங்கே இருந்தவர்கள் யாவரும் விஷயத்தைச் சுப்பிரமணிய
தேசிகரிடம் கேட்டு ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போனார்கள்.

தாயினும் அன்பு

      பிறகு ஆசிரியர் விடைபெற்று வெளியே வந்து கொலு மண்டபத்தில்
நின்றிருந்த காரியஸ்தராகிய ராமையரென்பவரை அழைத்தார்; “சாமிநாதையர்
காலையில் ஆகாரம் செய்து கொள்வது வழக்கம்; அதற்கு ஏற்பாடு செய்ய
வேண்டும்” என்று அவரிடம் சொன்னார். அவர் என்னை அழைத்துக்கொண்டு
அக்கிரகாரத்துக்குச் சென்றார். தம்முடைய ஆகார விஷயத்திலுள்ள
கவனத்தைக் காட்டிலும் என் ஆசிரியருக்கு என் உணவு விஷயத்தில் இருந்த
ஜாக்கிரதை அதிகம். இதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். தன்
குழந்தை வயிறு வாடப் பாராத தாயின் அன்புக்கும் என் ஆசிரியர் காட்டிய
அன்புக்கும் வேற்றுமையே இல்லை. இதை நான் மனமார அறிந்தவன்.
கோட்டூரில் இருந்த காலத்தில் ஒரு முறை பிள்ளையவர்களைப் பற்றிப்
பேசும்போது, “பெற்ற தாயாரைவிட மிகவும் அன்பாக நடத்துகிறார்” என்று
சொன்னேன். அந்த வார்த்தைகள் என் தாயார் காதில் விழுந்தன. “என்ன
அப்பா அப்படிச் சொல்கிறாய்! தாயாரைக் காட்டிலும் ஒருவர் அதிக அன்பு
காட்ட முடியுமா?” என்று கேட்டார். என் வார்த்தைகளால் அவர் சிறிது
வருத்தத்தையே அடைந்தார். பெற்ற தாய்க்கு அன்பு இருக்கலாம்; ஆனால்
அதைச் செயலிற் காட்ட இயலாதபடி அவள் நிலை இருக்கும். என்
ஆசிரியருடைய அன்போ அவ்வப்போது செயல்களாகப் பரிணமித்தது.
அச்செயல்கள் மற்றவர்களுக்குச் சிறியனவாகத் தோற்றலாம். நான் அவற்றைப்
பெரியனவாகவே கருதுகிறேன்.

அன்னபூரணி

      ஆசிரியரது அன்பைப் பற்றி நினைத்துக் கொண்டே ராமையருடன்
அவர் அழைத்துச் சென்ற வீட்டுக்குள் நுழைந்தேன். “அன்னபூரணி” என்று
ராமையர் தம்தமக்கையை அழைத்தார். பல