274என் சரித்திரம்

      சமயங்களில் சாதாரணமாகத் தோற்றும் சில நிகழ்ச்சிகள் முக்கியமான
சில சமயங்களில் மனத்தில் நன்றாகப் பதிந்து விடுகின்றன. என் நிலையையும்
என் பசியறிந்து உணவுக்கு ஏற்பாடு செய்யும் என் ஆசிரியர் அன்பையும்
நினைத்தபடியே மற்ற விஷயங்களை மறந்திருந்த எனக்கு “அன்னபூரணி”
என்ற அப்பெயர் ஏதோ நல்ல சகுனமாகத் தோற்றியது. ஒரு விதமான
ஆனந்தமும் ஏற்பட்டது. எனக்கு ஆகாரம் உதவ அன்னபூரணியையே அவர்
அழைத்தால் என்ன சந்தோஷம் விளையுமோ அத்தகைய சந்தோஷம்
உண்டாயிற்று. காசியில் அன்ன பூரணி அம்பிகையின் திருக்கோயில் விசேஷச்
சிறப்புடையதென்று கேள்வியுற்றிருந்தேன். முதல் நாள் இரவு காசிக்
கலம்பகத்தைப் படித்தபோது காசி நகரத்தை மனத்தால் அனுபவித்தேன்;
மறுநாள் காலையிலே அன்ன பூரணி தேவியே எனக்கு அன்னம் படைத்ததாகப்
பாவித்துக்கொண்டேன். “நமக்குக் குறைவில்லை என்பதை இறைவன் இத்தகைய
நிமித்தங்களால் உணர்த்துகிறான்” என்று நினைத்து மகிழ்ந்தபடியே அன்ன
பூரணியம்மாள் இட்ட ஆகாரத்தை உண்டு மீட்டும் பிள்ளையவர்களை
அணுகினேன்.

பாடம்

      “காசிக் கலம்பகத்தில் எஞ்சிய பாடங்களையும் படித்து விடலாமே”
என்று ஆசிரியர் சொன்னார். குமாரசாமித் தம்பிரான் முதலியவர்கள் பாடம்
கேட்பதற்காக வந்தார்கள். முதல் நாளைக் காட்டிலும் அதிக ஊக்கத்தோடு
நான் அன்று படித்தேன். முற்பகலில் அந்தப் பிரபந்தம் முடிந்தது. அப்பால்
குமாரசாமித் தம்பிரானும் வேறு சிலரும் பிள்ளையவர்களைப் பார்த்து, “இந்த
இரண்டு தினங்களில் ஒரு நல்ல நூலைக் கேட்டு முடித்தோம். ஐயா அவர்கள்
இங்கேயே இருந்து பாடம் சொன்னால் இன்னும் பல நூல்களை நாங்கள்
கேட்போம். எங்கள் பொழுதும் பயனுள்ளதாகப் போகும்” என்று கேட்டுக்
கொண்டனர்.

      ஆசிரியர் மாயூரம் சென்று சில தினங்களில் வந்து அவர்கள்
விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். திருவாவடுதுறைக்
காட்சிகளையும் அங்கு உள்ளோரின் அன்பையும் கண்ட எனக்கும்
பிள்ளையவர்கள் திருவாவடுதுறைக்கே வந்திருந்தால் நன்றாக இருக்குமென்ற
எண்ணம் உண்டாயிற்று.

சோழ மண்டல சதகம்

      அன்று பிற்பகலில் திருமலைராயன் பட்டணத்திலிருந்து ஆசிரியரைப்
பார்க்க வந்த கனவான் ஒருவர் தாம் கொண்டுவந்த