இரட்டிப்பு லாபம் 283

      இடங்களிற் சொல்லுவார். தேசிகரைத் தரிசிப்பதற்குக் காலையில்
அடிக்கடி பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள். அப்போதும் பாடம்
நடைபெறும். வந்தவர்களும் கேட்டு இன்புறுவார்கள். அத்தகைய
சந்தர்ப்பங்களில் பாடத்தின் சுவை அதிகமாகும். வந்திருப்பவர்களும் கேட்டுப்
பயனடையும்படி பிள்ளையவர்கள் பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுவார்.
சைவ சித்தாந்தக் கருத்துக்கள் வரும் இடங்களில் தேசிகர் மெய்கண்ட
சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள் காட்டி விஷயங்களை அருமையாக எடுத்து
விளக்குவார். அத்தகைய காலங்களில் பொழுது போவதே தெரியாது. தமிழ்
விருந்தென்று உபசாரத்துக்குச் சொல்லுவது வழக்கம். அங்கே நான்
அனுபவித்தது உண்மையில் விருந்தினால் உண்டாகும் இன்பமாகவே இருந்தது.
உணவின் ஞாபகம் அங்கே வருவதற்கே இடமில்லை.

     பாடம் கேட்கையில் ஒவ்வொரு பாடலையும் நான் மூன்று முறை
வாசிப்பேன். பொருள் சொல்லுவதற்கு முன் ஒரு முறை பாடல் முழுவதையும்
படிப்பேன். பொருள் சொல்லும்போது சிறு சிறு பகுதியாகப் பிரித்துப்
படிப்பேன். பொருள் சொல்லி முடிந்த பிறகு மீட்டும் ஒரு முறை பாடல்
முழுவதையும் படிப்பேன். இப் பழக்கத்தால் அப்பாடல் என்மனத்தில் நன்றாகப்
பதிந்தது. பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறை இது.

      திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த அன்ன சத்திரத்தில் நான்
காலையிலும் பகலிலும் இரவிலும் ஆகாரம் உண்டு வந்தேன்.

      ஒவ்வொரு நாளும் தமிழ்ப் பாடத்தினாலும் சுப்பிரமணிய தேசிகருடைய
சல்லாபத்தினாலும் அயலூர்களிலிருந்து வருபவர்களுடைய பழக்கத்தினாலும்
புதிய புதிய இன்பம் எனக்கு உண்டாயிற்று. தம்பிரான்கள் என்னிடம் அதிக
அன்போடு பழகுவாராயினர். எனக்கும் அவர்களுக்கும் பலவகையில்
வேற்றுமை இருப்பினும் எங்கள் ஆசிரியராகிய கற்பகத்தின் கீழ்க் கன்றாக
இருந்த நாங்கள் அனைவரும் மனமொத்துப் பழகினோம். அவர்களுள்ளும்
குமாரசாமித் தம்பிரான் என்பால் வைத்த அன்பு தனிப்பட்ட சிறப்புடையதாக
இருந்தது. எல்லோரும் தமிழின்பத்தாற் பிணைக்கப்பட்டு உறவாடி வந்தோம்.

      எங்களோடு மாயூரத்திலிருந்து வந்த சவேரிநாத பிள்ளை
திருவாவடுதுறையில் ஒரு வாரம் வரையில் இருந்து ஆசிரியரிடம் உத்தரவு
பெற்று மாயூரத்துக்குச் சென்றார். மாயூரத்தில் முன்சீப் வேதநாயகம் பிள்ளை
அவருக்குப் பழக்கமுடையவராதலால் அங்கே அவருடன் இருந்தனர்.