என் தந்தையார் குருகுலவாசம் 29

னிடம் தம் குமாரரை ஒப்பித்துத் தம் கருத்தையும் கூறினார். கனம்
கிருஷ்ணையர், “அடே, ஏதாவது பாடு பார்க்கலாம்” என்றார். என்
தந்தையாருக்கு என் பாட்டியார் கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்கள்
சிலவற்றைக் கற்றுக் கொடுத்திருந்தார். அவற்றில் ஒன்றை என் தந்தையார்
பாடிக் காட்டினார். அது ஸ்வர சுத்தமாக இருந்தது கண்ட கிருஷ்ணையர்,
“உன் பிள்ளைக்குச் சாரீரம் இருக்கிறது; நீயும் கொஞ்சம் சொல்லித்
தந்திருக்கிறாய். முன்னுக்கு வருவான்” என்று கூறினார்.

      “மாமா, உங்களிடம் இவனை ஒப்பித்து விட்டேன். இனிமேல் இவனுக்கு
ஒரு குறையும் இல்லை” என்றார் பாட்டியார்.

      “எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இவனுக்குத் தேக
புஷ்டிதான் போதாது. நன்றாகச் சாப்பிட வேண்டும். உடம்பு வளைந்து வேலை
செய்ய வேண்டும்” என்று கிருஷ்ணையர் கூறினார்.

      “நமக்குச் சொந்தக்காரராக இருப்பதனால்தான் நம்முடைய தேக
சௌக்கியத்தைப் பற்றி இவ்வளவு தூரம் சொல்லுகிறார்” என்று எந்தையார்
நினைத்துக் கொண்டார். ஆனால் உண்மை வேறு.

      கனமார்க்க சங்கீதம் எல்லோராலும் சாதித்துக் கொள்ள இயலாதது.
யானையின் பலமும் சிங்கத்தின் தொனியும் இருப்பவர்களே அதை முற்றும்
கடைப் பிடிக்கலாம். கனம் கிருஷ்ணையருக்குச் சரீர வன்மையும் சாரீர பலமும்
நன்றாகப் பொருந்தியிருந்தன. அதனால் அவர் அந்த மார்க்கத்தில் நல்ல
சாதனை பெற்றார். சங்கீத வித்துவான்கள் சாரீரத்தை மாத்திரம் பரீட்சை
செய்து பார்ப்பார்கள். கனமார்க்க சங்கீத வித்துவானாகிய அவர் சரீரத்தையும்
சாரீரத்தையும் ஒருங்கே பார்த்தார். இரண்டு வன்மையும் சேர்ந்தால்தான்
தம்முடைய வழி பிடிபடுமென்பது அவர் தம் அநுபவத்திற் கண்டதல்லவா?

      “இனிமேல் மண் வைத்து ஒட்டிப் புஷ்டிப்படுத்த முடியுமா? இருக்கிற
உடம்பைச் சரியாகக் காப்பாற்றிக் கொண்டால் போதும்” என்று என்
பாட்டியார் சொல்லிச் சில நாள் அங்கே தங்கியிருந்து பிறகு விடை பெற்று
உத்தமதானபுரம் போய்ச் சேர்ந்தார்.

      என் தந்தையாருடைய குருகுல வாசம் ஆரம்பமாயிற்று, கனம்
கிருஷ்ணையர் மனோதைரியமும் பிரபுத்துவமும் உடையவர். என் தந்தையாரை
அவர் மிக்க அன்போடு பாதுகாத்து வந்தார். ஆனாலும் அவருக்குப் பல
வேலைகளை ஏவுவார். தினந்தோறும்