சில சங்கடங்கள் 291

      ஒருவருக்கு மட்டும் தனியே உபசாரம் செய்வது தப்பு; இனிமேல்
இம்மாதிரியான காரியம் செய்யக்கூடாதென்று உத்தரவாகிறது” என்று
காரியஸ்தர் வந்து கிழவியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனார்.

      இந்நிகழ்ச்சி எனக்கு மிக்க மனத் துன்பத்தை உண்டாக்கியது, “பண்டார
சந்நிதிகள் நம்மிடமே நேரில் விஷயத்தை விசாரித்துத் தெரிந்து
கொண்டிருக்கலாமே! யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு இப்படிச்
செய்தார்களே” என்று வருந்தினேன். “ஒரு நாளும் அவர்கள் அப்படிச்
செய்யமாட்டார்கள். யாரோ ஒருவர் போய் எனக்கு விசேஷ உபசாரம்
நடந்ததாகச் சொல்லியிருக்கக் கூடும். பொதுவிடத்தில் பக்ஷபாதம் இருப்பது
சரியன்று என்று எண்ணி இப்படி உத்தரவு அனுப்பியிருக்கலாம். நமக்கு நடந்த
உபசாரம் மாங்கொட்டைக் குழம்புதான். அதுவும் தேக அசௌக்கியத்துக்காக
ஏற்பட்டதென்று தெரிந்திருந்தால் நம்மிடம் விசேஷ அன்பு வைத்திருக்கும்
அவர்கள் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்” என்று நானே சமாதானம்
செய்து கொண்டேன்.

இரவில் பொழுது போக்கு

      இரவில் ஆகாரம் செய்த பிறகு மடத்திற்கு வந்து அங்குள்ள
குமாரசாமித் தம்பிரானுடன் பாடத்தைப் படித்துச் சிந்தித்து வருவேன். பிறகு
அங்கேயே படுத்துக் கொள்வேன். இவ்வழக்கம் திருவாவடுதுறை சென்ற பிறகு
சில மாதங்கள் வரையில் இருந்தது. மடத்தில் தங்கி வந்த காலத்தில் ஒரு நாள்
இரவு அவருடன் வழக்கம்போலவே படித்துவந்தேன். மடத்தின் கீழ்ப்பக்கத்தில்
இருந்த சவுகண்டியில் தம்பிரான்கள் தங்கியிருப்பதற்காக இரண்டு அறைகள்
உண்டு. குமாரசாமித் தம்பிரான் ஓர் அறையில் இருந்து வந்தார். அதற்கு
எதிரே உள்ள அறையில் பன்னிருகைத் தம்பிரான் என்பவர் இருந்தார். அவர்
நல்ல செல்வாக்குடையவர். ஆதீனத்தில் பொறுப்புள்ள உத்தியோகங்களை
வகித்தவர். அறைகளுக்கு மத்தியிலுள்ள கூடத்தில் நாங்கள் இருந்து படித்த
நூல்களைச் சிந்தனை செய்வோம். அப்போது அவரும் உடனிருந்து
கவனிப்பார். படித்துக் கொண்டிருந்த நான் அலுப்பு மிகுதியால் அங்கே
படுத்துத் தூங்கி விட்டேன். இரவு மணி பத்து இருக்கும். குமாரசாமித்
தம்பிரானும் பன்னிருகைத் தம்பிரானும் பேசிக்கொண்டிருந்தனர். முத்துசாமி
ஓதுவார் அங்கே வந்தார்.

எதிர்பாராத சம்பவம்

      மடத்திலும் கோயிலிலும் அர்த்த சாமத்தில் நிவேதனமாகும்
பிரசாதங்களில் ஒரு பகுதி சுப்பிரமணிய தேசிகருக்கு வரும். அவற்