294என் சரித்திரம்

      சொன்னானென்று நினைக்க வேண்டும். அதை மறந்து விடுங்கள்”
என்று சொல்லி என்னைத் தேற்றினார். “இந்த அபய வார்த்தைகளை நான்
ஒரு போதும் மறவேன்” என்று கூறினேன்.

கண்டி அகப்பட்டது

      எங்கே பார்த்தாலும் இந்தக் களவைப்பற்றிய பேச்சாகவே இருந்தது.
மறுநாட் காலையில் பத்து மணிக்கு மடத்தின் ஒரு பக்கத்தில் பன்னிருகைத்
தம்பிரான் சிலரோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று
குளப்புரையிலிருந்து ஒரு வேலைக்காரன் மிகவும் வேகமாக ஓடிவந்து
தம்பிரானிடம் அந்தக் கண்டியைக் கொடுத்து, “சாமீ, இன்று காலையில் நான்
எல்லா இடங்களையும் பெருக்கிக் கொண்டிருந்தேன். படித்துறைச் சுவரின் மாட
மொன்றில் உள்ள விநாயகருக்குப் பின்னே ஏதோ பளிச்சென்று தெரிந்தது.
உடனே கவனித்தேன். இந்தக் கண்டி அகப்பட்டது” என்று சொன்னான்.

      அதை வாங்கிக் கொண்டு பன்னிருகைத் தம்பிரான் மிகவும் மகிழ்ச்சி
அடைந்து, “நேற்று நான் அனுஷ்டானத்துக்குப் போகையில் அங்கே இதை
மாடத்தில் வைத்து விட்டுத் தோட்டத்துக்குப் போனேன். அப்போது
திடீரென்று ஒரு சேவகன். “சந்நிதானம் அவசரமாக அழைக்கிறது” என்று
குடல் தெறிக்க ஓடிவந்து சொன்னான். என்னவோ ஏதோ என்று நானும்
மிகவும் வேகமாக வேறொன்றையும் கவனியாமல் சந்நிதானத்திடம் போனேன்.
சந்நிதானம் ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் கட்டளையிட்டது. சில நேரம்
அதே கவலையாக இருந்தேன். கண்டியைப் பற்றிய ஞாபகமே எனக்கு
உண்டாகவில்லை. சிறிது நேரம் பொறுத்தே அந்த ஞாபகம் வந்தது. பல
தடவை யோசித்துப் பார்த்தும் வைத்த இடம் ஞாபகத்துக்கு வரவில்லை. நான்
வைத்த இடத்தைவிட்டு மற்ற இடங்களிலெல்லாம் தேடினேன். பிறரையும்
தேடச் செய்தேன் அகப்படவில்லை. எப்படியோ இது சந்நிதானத்துக்கும்
தெரிந்து விட்டது. வயசு ஆக ஆக மறதி உண்டாகிறது. அனாவசியமாகப்
பலருக்குக் கவலை ஏற்பட்டது. பாவம்? சாமிநாதையர் மிக்க சஞ்சலத்தை
அடைந்து விட்டார்” என்று எல்லோரிடமும் சொன்னதோடு, உடனே எனக்கும்
அதைப்பற்றிச் சொல்லி அனுப்பினார். இச்செய்தி காதில் விழுந்ததும் நான்
விநாயகர் சந்நிதி சென்று வந்தனம் செய்தேன்.

கோளால் வந்த துன்பம்

      வேறொரு சமயம் என் ஆசிரியரிடம் யாரோ ஒருவர் சென்று
என்னைப்பற்றிக் கோள் கூறினார். அதனால் பிள்ளையவர்கள் என்பால்