30என் சரித்திரம்

      தம்முடைய ஆசிரியருக்கு என் தந்தையார் வஸ்திரம் துவைத்துப்
போடுவார்; வெந்நீர் வைத்துக் கொடுப்பார்.

      அந்த ஸமஸ்தான ஜமீன்தாராகிய கச்சிக் கல்யாண ரங்கர்
கிருஷ்ணையரையும் ஒரு ஜமீன்தாரைப் போலவே நடத்திவந்தார். அவருக்கு
எல்லாவிதமான சௌகரியங்களையும் அமைத்துக் கொடுத்தார். கனம்
கிருஷ்ணையர் குதிரையின் மேல் சவாரி செய்வதுண்டு. ஜமீன்தார் அவருக்கு
ஓர் அழகிய குதிரை வாங்கித் தந்திருந்தார்; பல்லக்கும் கொடுத்திருந்தார்.
“எங்கள் மாமாவுக்கு ராஜயோகம். அவருடைய மேனியழகும் எடுப்பான
பார்வையும் ராஜஸ சுபாவமும் ராஜாவாகப் பிறக்கவேண்டியவர் தவறிப்
பிராமணராகப் பிறந்து விட்டார் என்றே தோற்றச் செய்யும்” என்று தந்தையார்
கூறுவார்.

      தம்முடைய ஆசிரியர் குதிரையில் ஏறிச் செல்லும்போது சில
சமயங்களில் என் தந்தையார் அக்குதிரையின் லகானைப் பிடித்துச்
செல்வதுண்டாம். இளைய பிரம்மசாரியாகிய என் தந்தையார் இத்தகைய
வேலைகளில் கிருஷ்ணையர் தம்மை ஏவுவது குறித்துச் சில சமயங்களில் மனம்
வருந்துவார்; ‘சொந்தக்காரர்; மரியாதையாக நடத்துவார்’ என்று தாம்
எண்ணியதற்கு மாறாக இருப்பதை நினைந்து வெறுப்படைவார். ஆனால் அந்த
வருத்தமும் கோபமும் அடுத்த கணத்திலே மறைந்து விடும். உணவு
விஷயத்திலும் மற்றச் சௌகரியங்களிலும் என் தந்தையாருக்கு ஒரு விதமான
குறைவும் நேரவில்லை. தம் மாணாக்கரின் உடம்பு புஷ்டிப் படுவதற்காக
இத்தகைய ஏவல்களை அவர் இட்டனரென்றே எனக்கு இப்போது
தோற்றுகின்றது.

      முறையாக என் பிதா தம் ஆசிரியரிடம் சங்கீத அப்பியாசம் செய்து
வந்தார். ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் எழுந்து உடையார்பாளையம்
காண்டீப தீர்த்தத்தின் தென்கரையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் சாதகம்
செய்வது வழக்கம். கிருஷ்ணையருடைய கீர்த்தனங்கள் பலவற்றைக் கற்றுக்
கொண்டார். அவ்வப்போது அப்பெரியார் இயற்றும் சாகித்தியங்களையும் பாடம்
பண்ணி ஜமீன்தாருக்கும் அந்த ஸமஸ்தானத்துக்கு வரும் வித்துவான்களுக்கும்
பாடிக் காட்டுவார். பல பழைய சங்கீத வித்துவான்கள் இயற்றிய கீர்த்தனங்கள்
அவருக்குப் பாடமாயின. கனம் கிருஷ்ணையரையன்றி வேறு யாருக்கும்
தெரியாத சக்ரதானத்தையும் கற்றுக் கொண்டார்.

      இவ்வாறு இரவும் பகலும் குருவின் பணிவிடையிலும் சங்கீதப்
பயிற்சியிலும் என் தந்தையார் சோம்பலின்றி ஈடுபட்டிருந்தார். பன்னிரண்டு
வருஷ காலம் இந்தக் குருகுல வாசம் நடைபெற்றது.