310என் சரித்திரம்

      காரோணப் புராணம் முடிந்தவுடன் காசி காண்டத்தையும் பிரமோத்தர
காண்டத்தையும் நாங்கள் படித்தோம். அப்பால் கந்த புராணம்
ஆரம்பிக்கப்பட்டது. பாடம் மிகவும் வேகமாக நடந்தது. அப்போது
கண்ணப்பத் தம்பிரானென்பவரும் கும்பகோணம் வைத்தியநாத
தேசிகரென்பவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தனர். அவ்விருவரும்
இசையில் வல்லவர்கள்.

குமாரபுரிப் படலம்

      கந்தபுராணத்தின் முதற் காண்டத்தில் குமாரபுரிப் படலமென்ற ஒரு
பகுதி உள்ளது. அதில் முருகக் கடவுள் சேய்ஞலூரை உண்டாக்கி அங்கே
தங்கியிருந்தாரென்ற செய்தி வருகிறது. சண்டேசுவரர் அவதரித்த ஸ்தலமும்
அதுவே.

      முருகக் கடவுள் அங்கே எழுந்தருளியிருந்தபோது அவரோடு வந்த
தேவர்களும் இந்திரனும் தங்கியிருந்தார்கள். இந்திரன் இந்திராணியைப் பிரிந்து
வந்து வருத்தத்தை ஆற்ற மாட்டாமல் இரவெல்லாம் தூங்காமல்
புலம்பினானென்று கவிஞர் வருணிக்கின்றார். அப்பகுதி விரிவாகவும்
இந்திரனது மயல் நோயின் மிகுதியைத் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.

சாமிநாத பிள்ளை

      சில காலத்திற்குப் பின்பு திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள
வண்டானமென்னும் ஊரிலிருந்து சாமிநாத பிள்ளையென்பவர் மடத்தில் தமிழ்
படிப்பதற்காக வந்தார். ஓரளவு பயிற்சியுள்ளவர்களுக்கு என் ஆசிரியரும்
சுப்பிரமணிய தேசிகரும் பாடம் சொல்வார்கள். நூதனமாக வந்தவர்களுக்குப்
பழைய மாணாக்கர்கள் சிலர் பாடம் சொல்வதுண்டு. முக்கியமாகக் குமாரசாமித்
தம்பிரானும் நானும் அவ்வாறு சொல்லுவோம்.

      சாமிநாத பிள்ளை குமாரசாமித் தம்பிரானுக்குப் பூர்வா சிரமத்தில்
உறவினர். அவர் அத்தம்பிரானிடம் பாடம் கேட்டு வந்தார். ஒரு நாள் இரவு
பத்து மணி வரையில் அம்மாணாக்கர் தம்பிரானிடம் பாடம் கேட்டனர். பிறகு
தம்பிரான் சயனித்துக் கொண்டார். நானும் அங்கே ஓரிடத்திற் படுத்துத்
துயின்றேன்.

‘சேய்ஞலூர் இந்திரன்’

      குமாரசாமித் தம்பிரான் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு எழுந்து
பார்த்தபோது, சாமிநாதபிள்ளை படுத்து உறங்காமலே