சிறு பிரயாணங்கள் 337

      பெரிய கலியாண வீடுபோல இருந்தது. பிள்ளையவர்கள்
உத்தமதானபுரத்துக்கு வந்திருப்பதை அறிந்து மாளாபுரம், பாபநாசம்.
உத்தமதானி முதலிய இடங்களிலிருந்து பலர் வந்து அவர்களைப்
பார்த்துவிட்டுப் போனார்கள். ஒரு நாள் முழுவதும் உத்தமதானபுரத்திலிருந்து
விட்டு நாங்கள் மூவரும் அப்பால் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம்.

பாடல் இயற்றும் பழக்கம்

      ஒரு நாள் பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தா பிள்ளையின் காரியஸ்தர்
ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். நான் இயற்றிய சில பாடல்களைச்
சொல்லிக் காட்டினேன். பழநியாண்டவர் விஷயமாக நான் இயற்றியிருந்த ஒரு
பாடலைச் சொன்ன போது அவ்வழியே என் ஆசிரியர் வந்தார். அப்பாட்டின்
இறுதியடியாகிய “ஆபத்தை நீக்கியருள்வாய் பழநி யறுமுகனே” என்பது
மாத்திரம் இப்போது என் ஞாபகத்தில் இருக்கிறது.

      “என்ன பாட்டு அது?” என்று ஆசிரியர் கேட்டார். நான் பாடல்
முழுவதையும் சொன்னேன். “யார் பாடியது?” என்று கேட்டபோது நான்
இயற்றியதென்று தெரிவித்தேன். அதனைக் கேட்டு, “உமக்கு வாக்கு இருக்கிறது;
அடிக்கடி செய்யுள் இயற்றிப் பழகி வரவேண்டும். பழகி வந்தால் நாளடைவில்
சுலபமாக இருக்கும்” என்று சொன்னார். பிறகு, “நீர் செய்யும் பாடலை
என்னிடம் சொல்வதில்லையே. ஏதாவது பாடல் செய்து சொன்னால்
அவ்வப்போது திருத்திக் கொள்ளலாம்” என்றார்.

      “என் பாடல்களில் பிழை மலிந்திருக்கும். அவற்றை ஐயாவிடம் சொல்ல
நாணமாயிருக்கிறது” என்றேன்.

      “இனிமேல் அப்படி இருக்க லேண்டாம். அடிக்கடி பாடல் செய்து
சொல்லிக்காட்டும்” என்று அவர் கட்டளையிட்டார். நான் அது முதல் சில சில
பாடல்களைச் சொய்து சொல்லிக் காட்டுவேன். “இன்னது இன்னபடி இருந்தால்
இன்னும் நன்றாயிருக்கும்” என்று அவர் சொல்லுவார். அப்பழக்கத்தால்
செய்யுள் செய்யும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை ஆசிரியர்
மூலம் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

பால போத இலக்கணம்

      மற்றொரு நாள் பிற்பகலில் ஆசிரியரும் நானும் கும்பகோணம் சென்று
தியாகராச செட்டியார் வீட்டில் தங்கியிருந்தோம். அன்று இரவு அங்கே இருந்து
மறுநாள் பட்டீச்சுரம் போகலாமென்று செட்டியார் கேட்டுக் கொண்டதால்
அப்படியே இருந்தோம்.