சிறு பிரயாணங்கள் 339

     அன்று காலையில் நாங்கள் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம்.

உத்தியோக விருப்பம்

      இடையிடையே நாங்கள் கும்பகோணத்துக்குச் சென்று தியாகராச
செட்டியாரோடு பேசிப் பொழுது போக்குவோம். விடுமுறை நாட்களில்
செட்டியாரே பட்டீச்சுரத்திற்கு வருவார். அவ்வாறு வரும்போது பட்டீச்சுரத்தில்
ஆறுமுகத்தா பிள்ளையின் வீடு கலகலப்பாக இருக்கும். செட்டியார்
கண்டிப்பாகப் பேசினாலும் அப்பேச்சில் ஒரு சுவை இருக்கும். அவர் வந்தாலே
பிள்ளையவர்களுக்கும் எனக்கும் மிக்க சந்தோஷமுண்டாகும்.

      இவ்வாறு அடிக்கடி தியாகராச செட்டியாருடைய சந்திப்பு நேர்ந்ததனால்
எனக்கும் அவருக்கும் உள்ள பழக்கம் வர வர வலிமை பெற்றது. உள்ளொன்று
வைத்துப் புறம்பே அன்புடையார் போல நடவாமல் வெளிப்படையாகத் தம்
எண்ணங்களை வெளியிடும் அவரிடம் எனக்கும் அன்பு உறுதிபெறத்
தொடங்கியது. ஒரு காலேஜில் அவர் ஆசிரியராக இருந்தமையாலும் சிறந்த
அறிவாளியாதலாலும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்ததை நான்
உணர்ந்தேன். கும்பகோணத்தில் அவர் வீட்டில் தங்கின காலங்களிற் பல
கனவான்கள் அவரிடம் வருதலையும் பிறரிடம் அவர் நடந்து கொள்ளும்
விதத்தையும் கவனித்தேன். அதனால் அவருக்கிருந்த நன்மதிப்பு எனக்கு
நன்றாக வெளியாயிற்று. செட்டியார் தம் உத்தியோகத்தின் சார்பினால்
ஒருவருடைய தயையையும் எதிர்பாராத நிலையில் இருந்தார். பிள்ளையவர்கள்
சில சமயங்களில் தம் ஜீவனத்துக்குப் பிறர் கையை எதிர்பார்க்கும்
நிலைமையில் இருந்ததையும் கவனித்த நான் “நாமும் இப்படியே இருக்க
நேரும்” என்பதை அவ்விருவருடைய இயல்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து
அறிந்து கொண்டேன்.

      இந்த உணர்ச்சி ஏற்பட்டது தொடங்கி, “நமக்கும் ஒர் உத்தியோகம்
இருந்தால் பொருட் கவலையின்றி இருக்கலாமே” என்ற நினைவு எனக்கு
உண்டாயிற்று. ஒரு முறை தியாகராச செட்டியாரைச் சந்தித்த காலத்தில்,
“எனக்கு எங்கேனும் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துக் கொடுத்தால்
மெத்த உபகாரமாக இருக்கும். அதையும் பார்த்துக் கொண்டு ஒய்வு
நேரங்களில் ஐயாவிடமும் படித்து வருவேன்.” என்று சொல்லியிருந்தேன். இது
பிள்ளையவர்களுக்குத் தெரியாது. “சமயம் வந்தால் பார்க்கலாம்” என்று
செட்டியார் சொல்லியிருந்தார்,