356என் சரித்திரம்

      யிருந்தபொழுது அவர் மனத்தில் அந்த உத்ஸாகம் இருந்தது. அதைத்
தடைப்படுத்துவனவாகிய கடன் முதலியவற்றின் ஞாபகம் அப்போது
எழுவதில்லை. அத்தகைய ஞாபகம் மறைந்திருந்த அச்சந்தர்ப்பங்களில்
சோர்வின்றிக் கற்பனைகள் உதயமாகும்.

      அன்று அரங்கேற்றுவதற்கு வேண்டிய செய்யுட்களை இயற்றி விட்டுப்
பூஜை முதலியவற்றைக் கவனிக்கச் சென்றார் ஆசிரியர். மற்றவர்களும் விடை
பெற்றுச் சென்றனர். அன்றுமுதல் ஒவ்வொரு நாளும் காலையிற் செய்யுட்களை
இயற்றி மாலையில் அரங்கேற்றுவதே வழக்கமாகிவிட்டது.

புராண ஆராய்ச்சி

      திருப்பெருந்துறைப் புராணத்தில் மாணிக்கவாசகர் சரித்திரத்தை
விரிவாக அமைக்க எண்ணிய ஆசிரியர் அவர் வரலாற்றைப் புலப்படுத்தும்
வடமொழி தென்மொழி நூல்களை ஆராய்ந்து அவற்றிலிருந்து பல செய்திகளை
எடுத்துக் கொண்டனர். வடமொழியிலுள்ள ஆதி கைலாஸ மாகாத்மியம்,
மணிவசன மாகாத்மியம் என்னும் இரண்டு நூல்களை அங்கிருந்த
சாஸ்திரிகளைப் படித்துப் பொருள் சொல்லச் செய்து கேட்டார்.
ஆதிகைலாஸமென்பது திருப்பெருந்துறைக்கு ஒரு பெயர்.
திருப்பெருந்துறைக்குரிய பழைய தமிழ்ப்புராணங்களையும். திருவாதவூரடிகள்
புராணம், திருவிளையாடற்புராணம் என்பவற்றையும் என்னைப் படிக்கச் செய்து
மாணிக்கவாசகப் பெருமான் வரலாற்றை இன்னவாறு பாட வேண்டும் என்று
வரையறை செய்து கொண்டார்.

      சில காலமாக ஆசிரியர் சொல்லும் பாடல்களை எழுதுவதும்,
அரங்கேற்றுகையில் படிப்பதுமாகிய வேலைகளையே நான் செய்து வந்தேன்,
‘கற்றுச் சொல்லி’ உத்தியோகம் வகித்து வந்த எனக்குத் தனியே பாடம் கேட்க
இயலவில்லை. ஆயினும் முன்னே குறித்தவாறு மாணிக்கவாசகர் வரலாற்றின்
பொருட்டு நடைபெற்ற ஆராய்ச்சியினால் நான் மிக்க பயனையடைந்தேன்.
தமிழ்ப் புராண நூல்கள் சிலவற்றைப் படித்தபோது அவற்றைப் பாடம்
கேட்பதனால் உண்டாவதை விட அதிகமான பயனே கிடைத்தது.

ஜ்வரமும் கட்டியும்

      நான் ‘கற்றுச் சொல்லி’யாக நெடு நாட்கள் இருக்கவில்லை. என்னுடைய
துரதிருஷ்டம் இடையே புகுந்தது. எனக்கு ஜ்வர நோய் வந்தது. அதனோடு
வயிற்றிலே கட்டி உண்டாகி வருத்தத் தொடங்கியது. வயிற்றுப் போக்கும்
உண்டாயிற்று.