திருவிளையாடற் பிரசங்கம் 363

      விட்டதையும் பிள்ளையவர்களிடம் தெரிவித்தேன் என்பதை அவரிடம்
சொன்னேன்.

கல்லாடப் பரீக்ஷை

      இவ்வாறு தமிழ்நூல் சம்பந்தமான பேச்சிலே எங்கள் பொழுது
போயிற்று. ஒரு நாள் ரெட்டியாரும் நானும் பேசி வருகையில் அயலூரிலிருந்து
சில வித்துவான்கள் அவரைப் பார்க்க வந்தனர். நாங்கள் பேசியபோது
என்னை வந்தவர்கள் பாராட்டினார்கள். என்ன காரணத்தாலோ
ரெட்டியாருக்குச் சிறிது மன வேறுபாடு அப்போது உண்டாயிற்று. என்னை
அவர்களுக்குமுன் தலைகுனியச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் கொண்டார்
போலும்! அவர் பேசிய பேச்சிலும் என்னை இடையிடையே கேட்ட
கேள்விகளிலும் அவ்வேறுபாட்டை நான் கண்டேன்.

      அவர் திடீரென்று கல்லாடத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம்
கொடுத்துச் சில பாடல்களைக் காட்டிப் பொருள் கூறச் சொன்னார். சங்கச்
செய்யுட்கள் வழங்காத அக்காலத்தில் கல்லாடமே தமிழ் வித்துவான்களின்
புலமைக்கு ஓர் அளவு கருவியாக இருந்தது.

      ‘கல்லாடம் கற்றவரோடு சொல்லாடாதே’ என்ற பழமொழியும் எழுந்தது.
தமிழ்நாட்டில் அங்கங்கே இருந்த சிலர் கல்லாடம் படித்திருந்தார்கள்.
ரெட்டியார் அதைப் படித்தவர்.

      அவர் என்னிடம் அதைக் கொடுத்தவுடன் அவருக்கு என்னை ‘மட்டம்
தட்ட’ வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாக அறிந்தேன். நான் அவரைக்
காட்டிலும் கல்வியிற் சிறந்தவனாகக் காட்ட வேண்டும் என்று சிறிதேனும்
கருதவில்லை. கல்லாடத்தைப் பாடம் கேளாவிட்டாலும் சிறிது சிரமப்பட்டுக்
கவனித்து ஒருவாறு உரைகூறும் சக்தி எனக்கு இருந்தது. ரெட்டியார் நான்
உரை சொல்வதை விரும்பவில்லையே! உரைகூறாமல் இருப்பதைத்தானே
விரும்பினார்? அவ் விருப்பத்தை நான் யாதொரு சிரமும் இன்றி
நிறைவேற்றினேன்.

      “எனக்குத் தெரியவில்லை” என்று அமைதியாகச் சொன்னேன்.
அப்படிக் கூறிய பிறகு, அதனால் என் ஆசிரியருக்கு ஏதேனும் குறை வருமோ
என்று அஞ்சி, “பிள்ளையவர்கள் கல்லாடத்தைப் பதிப்பித்திருக்கிறார்கள். நான்
இன்னும் பாடம் கேட்கவில்லை” என்று மறுபடியும் கூறினேன்.

      இந் நிகழ்ச்சியால் ரெட்டியாருக்கும் அங்கிருந்தவர்களில் சிலருக்கும்
சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால் சிலருக்கு மாத்திரம்