398என் சரித்திரம்

      வெளிப்படுத்த வார்த்தைகளுக்குச் சக்தி ஏது? பாட்டுக்காகத்
துக்கத்திற்கு ஓர் உருவம் கொடுக்க முயற்சி செய்யவில்லை.

      சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களுக்கிருந்த கடனைத் தீர்த்து
அவர் குடும்பத்திற்கு வேண்டிய சௌகரியங்களை உசிதமாகச் செய்வித்து
அனுப்பினார். சிதம்பரம் பிள்ளை தம் அன்னையார் முதலியோருடன்
மாயூரத்திற்குப் போய் அங்கே இருந்து வரலானார்.

      அவர்கள் போகும் பொழுது நானும் உடன் சென்று மாயூரத்தில்
இரண்டு தினங்கள் தங்கியிருந்து திருவாவடுதுறைக்கு மீண்டும் வந்தேன்.

      மாயூரத்தில் வேதநாயகம் பிள்ளையைப் பார்த்தேன். பிள்ளை
யவர்களுடைய பிரிவைக் குறித்து மிகவும் வருத்தமுற்று அவர்களுடைய
கல்வியாற்றலை மிகவும் பாராட்டினார்.

தியாகராச செட்டியார் வருகை

      பிள்ளையவர்கள் இறந்துபோன தினத்திற்கு முதல்நாள் தியாகராச
செட்டியாருடைய தாயார் காலஞ் சென்றனர். அதனால் அவர்
திருவாவடுதுறைக்கு வரவில்லை; கடிதம் மட்டும் எழுதினார். தம்
அன்னையாருக்குரிய அபரக் கிரியைகளை எல்லாம் முடித்துவிட்டு அவர்
திருவாவடுதுறைக்கு வந்தார். உடனே தேசிகரைக் கண்டு பிள்ளையவர்களைக்
குறித்துப் பேசி வருத்தமுற்றார். என் மன இயல்பு தெரிந்த அவர் எனக்குப்
பல படியாக ஆறுதல் கூறினார்.

      என் வாழ்க்கையில் ஒரு புதிய நிலைமை ஆரம்பமாயிற்று.
பிள்ளையவர்களைப் பிரியாமல் மாணாக்கனாக இருந்த நிலை மாறிச்
சுப்பிரமணிய தேசிகரிடம் மாணாக்கனாகவும் வேறு சில மாணவர்களுக்கு
பாடம் சொல்லும் ஆசிரியனாகவும் அப்போது ஆனேன்.

தந்தையாரும் தேசிகரும்

      என் தாய் தந்தையார் என்னுடன் என் சிறிய தாயார் வீட்டில் இருந்து
வந்தனர். அவர்கள் அவ்வாறு இருந்து வருவது சுப்பிரமணிய தேசிகருக்குத்
தெரியாது. ஒருமுறை புதுக்கோட்டையிலிருந்து வந்த தியாகராஜ சாஸ்திரிகள்
என் தந்தையாரைக் கண்டு சங்கீத விஷயமாகச் சம்பாஷித்து மகிழ்ச்சி
அடைந்தார். அவருக்கும் என் தந்தையாருக்கும் முன்பே பழக்கமுண்டு. கனம்
கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களை என் தந்தையார்பாற் கேட்ட சாஸ்திரிகள்
அவற்றின் அமைப்பை மிகவும் பாராட்டினர்.