புது வீடு 429

      கொள்வதற்கு எனக்குத் தைரியம் இல்லை ஒன்று, நான் அவர்கள்
உள்ள இடத்திற்குச் சென்று இருக்கவேண்டும்; அல்லது அவர்கள் நான்
இருக்குமிடத்திற்கு வரவேண்டும். தேசிகர் கட்டளை எனக்கு உத்ஸாகத்தை
உண்டாக்கியது. கடிதம் எழுதினேன். தாய் தந்தையர் ஒரு வாரத்தில்
திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தனர்.

இல்லறம்

      தேசிகருடைய ஆலோசனை அப்பொழுதுதான் எனக்கு நன்கு
விளங்கிற்று. தாம் கட்டுவித்த புது வீட்டில் என் தாய் தந்தையருடன் என்னை
வசிக்கச் செய்யவேண்டுமென்ற அவர் அன்பு கனிந்த கருத்தை நான் உணர்ந்து
உள்ளம் பூரித்தேன். அது மட்டுமா? நான் கிரமமாக இல்லறம் நடத்த
வேண்டுமென்பதும், நிரந்தரமாகத் திருவாவடுதுறை வாசியாக
வேண்டுமென்பதும் அவர் விருப்பமென்பதையும் தெரிந்து என் நல்வினையை
வாழ்த்தினேன்.

      இடம் பொருள் ஏவலால் நிரம்பிய தேசிகருக்கு உள்ளமும் தயையால்
நிரம்பியிருந்தது. பிறருக்கு உபகாரம் செய்து இன்பம் அடைவது அவர் இயல்பு.
பிறருக்கு ஈவதனால் அவ்வீகையைப் பெறுபவனுக்கு உண்டாகும் இன்பத்தைக்
காட்டிலும் கொடுப்பவருக்கு உண்டாகும் இன்பம் அதிகம். திருவள்ளுவர் மிக
அழகாக,

      “ஈத்துவக்கு மின்பம் அறியார்கொல் தம்முடைமை
      வைத்திழக்கும் வன்க ணவர்”

      என்று கூறியதன் பொருளைச் சுப்பிரமணிய தேசிகருடைய செயலால்
தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.

      ஈசுவர வருஷம் கார்த்திகை மாதத்தில் (நவம்பர், 1877) நாங்கள் புது
வீட்டிற்குப் போய் வசிக்கலானோம். எனக்கு உண்டான சந்தோஷத்தைக்
காட்டிலும் என் தாய் தந்தையர் முதலியோருக்குப் பல மடங்கு அதிக மகிழ்ச்சி
உண்டாயிற்று. மாதத்துக்கு ஓர் ஊரும் நாளுக்கு ஒரு வீடுமாக அலைந்து
நைந்து வாழ்ந்த அவர்களுக்கு ஸ்திரமாக ஓரிடத்தில் வாழும்படி ஏற்பட்ட
வாழ்க்கை இந்திர போகத்தைப் போல இருந்தது.

      நான் இல்லற வாழ்வை மேற்கொண்டேன். எங்கள் குடும்பத்திற்கு
வேண்டிய பொருள்களெல்லாம் மடத்திலிருந்து கிடைத்தன. முதலில்
மடத்திலிருந்து அதிகாரிகள் சிலர், “அயலூராருக்கு இவ்வளவு சௌகரியம்
ஏற்படுவதா?” என்று, பொறமை கொண்டனர். பெரிய இடங்களில் இப்படிச்
சில பிராணிகள் இருப்பது