சிறப்புப் பாடல்கள் 435

      மணிய தேசிகர் சொன்னார். அவ்வாறு அமைப்பதில் எனக்குச் சம்மதம்
இல்லை. “பிள்ளையவர்கள் ஆதீன வித்துவானாக விளங்கிய இந்த இடத்தில்
நான் இப்பட்டத்தை வகிப்பதற்குச் சிறிதும் தகுதியுடையவனல்லன்.
ஸந்நிதானத்திடம் படிப்பவன் என்று போட்டால் அதனையே பெரிய
பாக்கியமாகக் கருதுவேன்” என்றேன்.

      “இப்பட்டத்தை அமைக்க நீர் தடை செய்தாலும் மற்றொரு விஷயத்தை
நீர் தடை செய்யமுடியாது” என்று தேசிகர் சொன்னார்.

      “அந்த விஷயம் என்ன?” என்று நான் கேட்டேன்.

      “உம் பெயரைத் திருவாவடுதுறைச் சாமிநாதையரென்றுதான் அமைக்க
வேண்டும்.”

      “அதற்குத் தக்கவாறு ஸந்நிதானத்தில் என்னை ஆக்கிவிட்ட பிறகு
அந்தப்படியே அமைப்பதில் என்ன குற்றம்?” என்று நான் கூறினேன்.

      என் சிறப்புப் பாயிரத்திற்கு மேல், திருவாவடுதுறை ஆதீன மகா
சந்நிதானத்திடத்துக் கல்வி கற்கின்றவரும், வேங்கடசுப்ப ஐயரவர்கள்
புத்திரருமாகிய திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரவர்களியற்றிய அறுசீர்க்கழி
நெடிலடி யாசிரிய விருத்தம்’ என்னும் தலைப்பு அமைக்கப்பட்டது.

      என்னைத் திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரென்று வழங்குவது
உறுதியாயிற்று. திருவாவடுதுறையென்பது ஊர்ப் பெயராக இருந்தாலும் அதை
என் பெயரோடு சேர்த்தபோது எனக்கு ஒரு கௌரவப் பட்டம் கிடைத்தது
போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று.

      சுப்பிரமணிய தேசிகர், ஆதீன வித்துவான் என்று போடவேண்டுமென்று
சொன்னதே எனக்கு உத்ஸாகத்தை உண்டாக்கிற்று. அவர் என்னைப் பற்றிக்
கொண்டுள்ள அபிப்பிராயத்தை அறிந்தேன். அப்பெயரை அப்பொழுது
மும்மணிக் கோவைப் புஸ்தகத்தில் அச்சிடாவிட்டாலும், தேசிகர் பிற்காலத்தில்
தம் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார். நான் கும்பகோணம் காலேஜில்
உத்தியோகம் பெற்ற பிறகு அவர் எனக்கு எழுதிய கடிதங்களிலும், அனுப்பிய
புஸ்தகங்களின் முன் பக்கங்களிலும், “நமது ஆதீன வித்துவான்”, “ஆதீன மகா
வித்துவான்” என்றெல்லாம் எழுதுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்.

வேணுவன லிங்க விலாசம்

      அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்திலுள்ள கொலுமண்டபத்தின்
முற்றவெளியானது கீற்றுப் பந்தலாகவே விசால