458என் சரித்திரம்

      குருவின் ஞாபகார்த்தமாக அம்பலவாண தேசிகபுரமென்ற புதிய
பெயரை வைத்தார். அங்கே தேசிகர் ஒரு நாள் தங்கினார்.

‘வெள்ளி வில்லை தங்க வில்லை’

      அக்காலத்தில் திருப்பனந்தாட் காசிமடத்தில் தலைவராக விளங்கிய ஸ்ரீ
ராமலிங்கத் தம்பிரானென்பவர் சுப்பிரமணிய தேசிகரிடம் பேரன்பு பூண்டவர்.
தேசிகர் யாத்திரை செய்வதை அறிந்து தாமும் அவரோடு சேர்ந்து சில
நாட்கள் பிரயாணம் செய்ய விரும்பித் தனிப் புகைவண்டி யொன்றை ஏற்பாடு
செய்து கொண்டு திருநெல்வேலி மார்க்கமாகச் செவந்திபுரம் வந்து தேசிகரைத்
தரிசித்து உடனிருப்பாராயினர். அத்தம்பிரான் கம்பனேரி புதுக்குடியைக் கண்டு
மிகவும் மெச்சினார். அந்தக்கிராமம் மிகவும் விசாலமாக இருந்தது. சுப்பிரமணிய
தேசிகர் பரிவாரங்களுடன் தங்கினமையால் அப்போது அது ஒரு பெரிய
நகரம்போல விளங்கிற்று.

      மகாவைத்தியநாதையரும் அவர் தமையனாராகிய இராமசாமி ஐயரும
அணிந்திருந்த ருத்திராட்ச கண்டிகளை வாங்கி அவற்றிற்குத் தேசிகர் தங்க
வில்லை போடச்செய்து அளித்தனர். எனக்கு திருவிடைமருதூரில் அளித்த
கண்டியில் தங்க முலாம் பூசிய வெள்ளி வில்லைகளே இருந்தன. அந்தக்
கண்டிக்கும் தங்க வில்லைகளை அமைக்கச் செய்து எனக்கு அளித்தார்.
அப்போது இராமசாமி ஐயர் சிலேடையாக, “வெள்ளி வில்லை தங்க வில்லை”
என்றார். யாவரும் கேட்டு மகிழ்ந்தனர்.

சங்கர நயினார் கோயில்

      தேசிகர் முன்னரே செய்திருந்த ஏற்பாட்டின்படி சங்கர நயினார்
கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு உத்ஸவத்திற்குச் சென்றனர். சோழ
நாட்டில் வைத்தீசுவரன் கோயிலுக்கு எவ்வளவு சிறப்புண்டோ அவ்வளவு
சிறப்பு சங்கர நயினார் கோயிலுக்கும் உண்டு. சிவபெருமானும் திருமாலும்
பேதமின்றி இயைந்து நிற்கும் சங்கர நாராயண மூர்த்தியைத் தரிசித்து
ஆனந்தமடைந்தேன். அவ்வாலயத்திலுள்ள புற்று மண்ணை மருந்தாக உண்டு
நோய்கள் தீர்ந்த பக்தர்கள் பலரைப் பார்த்தேன். அங்கே எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ கோமதியம்மையைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தேன். இறைவனைக்
குறித்து அத்தேவி தவஞ்செய்த சிறப்பை நினைவுறுத்த ஒவ்வொரு வருஷமும்
ஆடி மாதத்தில்