460என் சரித்திரம்

      யோசிக்கலானேன். பிறகு, “தங்களைத் தெரியவில்லையே” என்று
கேட்டேன். அவர், “அடியேன் அவ்விடத்துச் சிஷ்யன்தான்” என்றார்.
அப்பொழுதும் எனக்கு விளங்கவில்லை. “பெயர் என்ன” என்று கேட்டேன்.
“நான்தான் சொக்கலிங்கம்; திருவாவடுதுறையில் தங்களிடம் பாடம்
கேட்கவில்லையா?” என்றார்.

      “சொக்கலிங்கத் தம்பிரானா? அடையாளமே தெரியவில்லையே!” என்ற
ஆச்சரியமடைந்து நின்றேன்.

      “இப்போது வேஷம் மாறி விட்டது; நான் சொக்கலிங்கம் பிள்ளையாகி
விட்டேன்.”

      சௌக்கியமாக இருக்கிறீரா? உமக்கு இரண்டு சாண் நீளம்
சடையிருந்ததே! ஏன் இப்படி மாற வேண்டும்?” என்று கேட்டேன்.

      “நான் திருவாவடுதுறையில் இருந்த போது துறவிகளின் சகவாசம்
இருந்தது. படிப்பில் ஆசை தீவிரமாக இருந்தது. தாங்களும் பாடம் சொல்லித்
தந்தீர்கள். ஸந்நிதானம் கருணையுடன் பாதுகாத்து வந்தது. என்னவோ
நினைத்து இங்கே வந்தேன். பழைய பாசம் சுற்றிக் கொண்டது. உறவினர்கள்
கிருகஸ்தாசிரமத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.
எனக்கும் அந்த இச்சை உண்டாயிற்று. நான் மனிதன்தானே? காவி உடை
தரித்த மாத்திரத்தில் பெரிய ஞானியாகி விடுவேனா? கலியாணம் செய்து
கொண்டேன். இங்கே பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருகிறேன்.
ஊரிலுள்ளவர்கள் குறைவில்லாமல் ஆதரித்து வருகிறார்கள். எல்லாம்
அவ்விடத்து அனுக்கிரகம்” என்றார்.

      பிறகு அவர் விடை பெற்றுச் சென்றார். நாங்கள் தேசிகரிடம் சென்று
சொக்கலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சொன்னோம். அவர், “துறவுக் கோலம்
பூண்டு அந்நிலைக்குத் தகாத காரியங்களைச் செய்வதை விட இம்மாதிரி
செய்வது எவ்வளவோ உத்தமம்” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார்.

திருச்செந்தூர்

      கரிவலம் வந்த நல்லூரிலிருந்து புறப்பட்டு ஆழ்வார் திருநகரி முதலிய
ஊர்களின் வழியாகத் திருச்செந்தூரை அடைந்தோம். செந்திலாண்டவனுக்குத்
திருவாவடுதுறை யாதீனத்தின் மூலம் நடைபெறும் பணிகள் பல உண்டு.
அவற்றிற்குரிய மடங்களும் பல உள்ளன. அங்கே ஆவணி மாதத்தில்
நடைபெறும் உற்சவ தரிசனம் ஆயிற்று. தேசிகர், பிராமண போஜனம்,
மகேசுவர பூஜையாகியவற்றை நடப்பித்தார்.