சமயோசிதப் பாடல்கள் 465

      “மருத மரத்து நிழலூடு வெள்ளை மணலிருப்பும்
      பொருத மரப்பொன்னுப் பிள்ளைவெங் காவல் புரிந்துஞற்றும்
      விருதம ரற்புத வூற்று டலும்நிதம் மேவப்பெற்றால்
      கருத மரக்க னரமாத ரோடிருக் கையினையே.”

      மருதமரத்தின் நிழலுக்கிடையில் உள்ள வெள்ளை மணலாகிய இடமும்
யாருடனும் போராடி முழங்கும் முழக்கத்தையுடைய பொன்னுப் பிள்ளை
வலியக் காவல் புரிந்து அமைக்கும் சிறப்புப் பொருந்திய அற்புதமான ஊற்றில்
நீராடுதலும் தினந்தோறும் பெறுவதாயிருந்தால் அரம் போன்ற கண்ணையுடைய
தேவ மகளிரோடு வாழ்வதையும் பெரிதாக நினைக்க மாட்டோம்.

      [பொரு தமரம் - போர் செய்யும் முழக்கம். விருது - சிறப்பு. கருதம் -
கருதோம். அரமாதர் - தேவ மகளிர்.]

      “பாட்டுடைத் தலைவனது இயல்பில் கொஞ்சம் பாட்டுக்கும்
வந்துவிட்டது போலும்!” என்று சொல்லிக் கொண்டே தம்பிரான் சிரித்தார்.
பிறகு, பொன்னுப் பிள்ளையை அழைத்து, “உன்னுடைய வேலையையும்
உன்னையும் புகழ்ந்து இவர்கள் பாடியிருக்கிறார்களே? கேட்டாயா?” என்றார்.
நான் அந்தப் பாட்டைச் சொன்னேன். ‘பொன்னுப் பிள்ளை’ என்பதை
மாத்திரம் அழுத்தமாகச் சொன்னேன். அவனுக்கு அந்தப் பாட்டில் வேறு
என்ன தெரியப் போகிறது? அந்தப் பெயர் காதில் விழுந்த போது அவனை
அறியாமலே ஒரு புன்னகை அவன் முகத்தில் உண்டாயிற்று. “பேஷ்;
அருமையாக இருக்கிறது” என்று தம்பிரான் சொல்லிச் சிரித்தார். “என் பாட்டு
அருமையா? அவன் சிரிப்பு அருமையா?” என்ற விஷயத்தில் எனக்குச் சிறிதும்
சந்தேகமே இல்லை.

      “ஐயா அந்த ஊற்றில் ஸ்நானம் செய்யலாம்; சுத்தமாக இருக்கிறது”
என்று என்னைச்சுட்டி அந்தக் காவற்காரன் சொன்னான்.

      “பாட்டுடைத் தலைவன் அளிக்கும் பரிசு அது தான்” என்றார்
தம்பிரான்.

ரெயில் பாட்டு

      குமாரசாமித் தம்பிரான் தெற்குக் குளப்புரையின் நாற்புறத்துமுள்ள
பூந்தோட்டத்தில் பலவகையான புஷ்பச் செடிகள் வைத்துப் பாத்திகட்டி மரு,
மருக்கொழுந்து முதலியவற்றை மிகுதியாகப் பயிர்செய்து அருகிலுள்ள
ஸ்தலங்களுக்கும் அனுப்புவார்; என் தந்தையாரது பூஜைக்கும் நாள்தோறும்
அனுப்புவார்.