470என் சரித்திரம்

      நமசிவாயதேசிகர் பிள்ளையவர்களிடம் படித்தவர். எப்பொழுதும் தமிழ்
நூல்களை ஒழுங்காக ஆராய்ந்து படித்துவருபவர். சைவசாஸ்திர நுட்பங்களை
நன்கு உணர்ந்தவர். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதையே பொழுது
போக்காக உடையவர். அவரிடம் தினந்தோறும் காஞ்சிப் புராணத்தைப் பாடம்
கேட்டு வந்தேன். சிவஞான முனிவர் வாக்குக்கும் கச்சியப்ப முனிவர்
வாக்குக்கும் மிக்க வேற்றுமை உண்டு. சிவஞான முனிவர் வாக்கில் கருத்தும்,
கவியும் ஒன்றோடு ஒன்று பின்னிச் செல்கின்றன. இயல்பாகச் செல்லும் கவியின்
கதியில் கருத்துக்கள் தாமே வந்து பொருந்திச் சுவைபட இசைந்து நிற்கின்றன.
இரண்டாங் காண்டத்தில் கச்சியப்ப முனிவர் தம் அறிவாற்றலை
வெளிப்படுத்தியிருக்கிறார். சங்க நூல்களிலுள்ள கருத்துக்களையும்
சொற்களையும் எடுத்து ஆளுகின்றார். இலக்கண மேற்கோளாகக் காட்டப்
பெறும் அரிய சொற்றொடர்ப் பிரயோகங்களை அவர் வாக்கிலே மிகவும்
காணலாம். சிவஞான முனிவர் வாக்கில் நம்மை மறந்த இன்பம் உண்டாகிறது.
கச்சியப்ப முனிவர் வாக்கில் அவரது உன்னதமான அறிவாற்றலை நினைந்து
வியப்படைகிறோம்.

      காஞ்சிப்புராணம் பாடம் கேட்டு முற்றுப்பெற்றவுடன் கச்சியப்ப முனிவர்
வாக்காகிய பேரூர்ப் புராணத்தைக் கேட்டேன். அது முடிந்தவுடன் மீட்டும் ஒரு
முறை அவ்விரண்டு நூல்களையும் பாடம் கேட்டேன்.

மாணிக்கவாசகர் ஆலய கும்பாபிஷேகம்

      அக்காலத்தில் திருப்பெருந்துறைக் கட்டளை விசாரணை செய்து வந்த
ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரான், கோயில் முகற்பிராகாரத்தின் மேல்புறமாக ஓர்
ஆலயம் கட்டுவித்து அதில் மாணிக்கவாசகர் திருவுருவத்தைப் பிரதிஷ்டை
செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். மகா வைத்தியநாதையர் தமையனாராகிய
இராமசாமி ஐயர் முன்பே பெரிய புராணக் கீர்த்தனம் இயற்றியிருந்தார். அதில்
சைவ சமயாசாரியர்களாகிய மூவர் சரித்திரமும் அடங்கியுள்ளன நான்கு
சைவசமயாசாரியர்களில் மாணிக்கவாசகர் சரித்திரம் தமிழ்க் கீர்த்தனையாக
இராமையால் அதனை அவர் தனியே கீர்த்தனை உருவத்தில் இயற்றி அங்கே
அரங்கேற்றினார். அப்போது கும்பாபிஷேகச் சிறப்பைப் பற்றியும்
மாணிக்கவாசகர் சரித்திரத்தைப் பற்றியும் நாங்கள் தனித்தனியே பல பாடல்கள்
இயற்றிப் படித்துக் காட்டினோம்.

திருப்பனந்தாள்

      பிறகு திருவாவடுதுறைக்குப் புறப்படவேண்டும் என்று தீர்மானித்த
தேசிகர் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலா