காலேஜில் முதல் நாள் அனுபவம் 499

      கொள்ளும் முறை சரியானபடி இருந்தால் அவர்களுடைய அன்பைப்
பெறலாம். பாடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டும், அடிக்கடி நடந்த
பாடங்களில் கேள்வி கேட்க வேண்டும்; மற்ற ஆசிரியர்களிடமும்
ஜாக்கிரதையாகப் பழகவேண்டும்” என்று அவர் பின்னும் பல போதனைகளை
எனக்குச் செய்தார்.

      பிறகு திங்கட்கிழமை நல்ல வேளையில் காலேஜுக்குப் போக
வேண்டுமென்று எண்ணி ஜோஸியரைக் கண்டு பார்த்த போது 12 மணிக்குமேல்
நல்லவேளை யென்று தெரிந்தது.

      “நாளைக்குப் பதினொன்றரை மணிக்கு ஸித்தமாக இருந்தால் நான்
காலேஜுக்குப் போய்ச் சொல்லியனுப்புகிறேன். அப்போது வரலாம்” என்று
செட்டியார் சொல்லி எனக்கு விடை கொடுத்தனுப்பினார்.

      அன்று மாலையில் முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று ஸ்வாமி
தரிசனம் செய்து வந்தேன்.

காலேஜ் பிரவேசம்

      திங்கட்கிழமை பகற்போஜனம் செய்து விட்டுச் சேஷையர் வீட்டில்
காத்திருந்தேன். பதினொன்றரை மணிக்குச் செட்டியார் உத்தரவுப்படி
காலேஜிலிருந்து இரண்டு மாணாக்கர்கள் என்னை அழைக்க வந்தார்கள். நான்
சுப்பிரமணிய தேசிகர் அளித்த உடைகளில் சட்டையை அணிந்து அதன் மேல்
துப்பட்டாவைப் போர்த்துத் தலையில் சால்வையைக் கட்டிக் கொண்டு
சென்றேன். அந்தக் கோலத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கே
சிரிப்பு வருகிறது.

      காலேஜின் தாழ்வாரத்தில் மேலைக் கோடியிலுள்ள ஒரு தூணருகில்
தியாகராச செட்டியாரும், ஆர். வி. ஸ்ரீநிவாசையரும் என்னை எதிர்பார்த்து
நின்று வரவேற்று அழைத்துச் சென்றார்கள். நல்ல வேளையென்று
குறிப்பிட்டிருந்தகாலம் தமிழ்ப்பாடம் இல்லாதவேளை. அவ்விருவரும் எப். ஏ.
இரண்டாம் வகுப்புக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே பாடம்
நடத்திய ஹனுமந்தராவிடம் முன்பே, “இவர் நல்ல வேளையில் பாடம் சொல்ல
வேண்டியிருப்பதால் உங்கள் மணியை இவருக்குக் கொடுக்க வேண்டும்” என்று
தெரிவித்திருந்ததனால் நாங்கள் வகுப்புக்குள் புகுந்தவுடன் ஹனுமந்தராவ் தம்
ஆசனத்தை விட்டு எழுந்து எங்களை வரவேற்றார்.

      “இப்படி உட்காருங்கள்” என்று மேடையின் மீதிருந்த நாற்காலியை
எனக்குச் சுட்டிக்காட்டினார் ஹனுமந்தராவ். எனக்கு