என்ன பிரயோசனம் 531

      போனேன். அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது,
கோவைகளில் பதினைந்து, பிள்ளைத் தமிழ்களில் முப்பது, உலாக்களில்
இருபது, தூதுகள் இப்படியே பிரபந்தங்களை அடுக்கினேன். அவர் முகத்தில்
கடுகளவு வியப்புக் கூடத் தோன்றவில்லை.

அசையாத பேர்வழி

      “இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று திடீரென்று அவர்
இடை மறித்துக் கூறினார். நான் மிக்க ஏமாற்றம் அடைந்தேன். ‘இவர்
இங்கிலீஷ் படித்து அதிலே மோகங்கொண்டவராக இருக்கலாம்.அதனால்தான்
இப்படிச் சொல்லுகிறார்’ என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. ஆனாலும்
நான் விடவில்லை. புராண வரிசையைத் தொடங்கினேன்.

      “திருவிளையாடற் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப்
புராணம், கந்த புராணம், பெரிய புராணம், குற்றாலப் புராணம். . . . “

      அவர் பழையபடியே கற்சிலைபோல இருந்தார்.

      “நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞானசித்தி யார்
உரை. . . . .” என்னும் நூல்களின் பெயர்களைச் சொன்னேன். இலக்கண
நூல்களை எடுத்துக் கூறினேன். அப்பொழுதும் அவருக்குத் திருப்தி
உண்டாகவில்லை. ‘அடடா! முக்கியமானவற்றையல்லவா மறந்து விட்டோம்?
அதை முதலிலேயே சொல்லியிருந்தால் இவரை வழிக்குக் கொண்டு
வந்திருக்கலாமே!’ என்ற உறுதியுடன், “கம்பராமாயணம் முழுவதும் இரண்டு
மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடமும் சில காண்டங்களைப்
பாடம் கேட்டிருக்கிறேன்” என்றேன்.

      இராமசுவாமி முதலியார், “சரி, அவ்வளவு தானே?” என்று கேட்டார்.
எனக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. ‘கம்பராமாயணத்தில் கூடவா
இவ்வளவு பராமுகம்! இவ்வளவு அசட்டை!’ என்ற நினைவே அதற்குக்
காரணம். அதற்கு மேலே சொல்ல என்ன இருக்கிறது? ஆனால் அவர்
என்னை விடுகிறவராக இல்லை. மேலும் கேள்வி கேட்கலானார்.

பழைய நூல்கள்

      “இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களெல்லாம் படித்தது சரிதான். பழைய
நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?