அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும் 545

      திற்குக் கோபாலராவே அஸ்திவாரக் கல் நாட்டினார். பொது
ஜனங்களிடத்திலிருந்து பணம் வசூல் செய்து மண்டபம் கட்டத்
தொடங்கினார்கள்.

கோபாலராவ் பிரிவுபசாரம்

      இப்படியிருக்கையில் 1882-ஆம் வருஷம் கோபாலராவை அரசாங்கத்தார்
சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜு க்கு மாற்றினார்கள். பல வருஷங்களாகக்
கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்து எல்லோருடைய நன்மதிப்பையும்
பெற்றவர் அவர். பிள்ளைகள் அவரிடத்தில் பயபக்தியோடு நடந்தாலும்,
உள்ளத்துள்ளே அவர் பால் தனியான அன்பைக் கொண்டிருந்தனர். இதற்குக்
காரணம் அவரது திறமைதான். தாமே தனியாகப் படித்துப் பரீட்சைகளில்
தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலையை ஒழுங்காகப் பார்த்துவந்த அவருடைய
முயற்சியை அறிஞர்களெல்லாம் பாராட்டுவார்கள். அவர் ஷேக்ஸ்பியர்
நாடகங்களைப் பாடம் சொல்லும்போது மாணாக்கர்கள் அசைவற்ற
பிரதிமைகளைப் போல இருந்து கேட்பார்கள். திருத்தமும் தெளிவுமுள்ள
வார்த்தைகளால், மாணாக்கர்களின் அறிவு நிலையை அறிந்து விஷயங்களை
உணர்த்துவதில் அவர் மிக்க சமர்த்தர். ஆங்கிலத்தில் அவருக்குள்ள மேதை
மிகச் சிறப்பு வாய்ந்தது. அவர் எப்பொழுதும் படித்துக் கொண்டேயிருப்பார்.
தமிழ் நூல்கள் சிலவற்றில் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. எதைப் படித்தாலும்
அழுத்தமாகப் படித்து நினைவில் இருத்திக் கொள்ளுவதால் அவர் படிப்பு
அவ்வளவும் பயனுள்ளதாயிற்று. அவருக்கு நன்னூலிலும், குறள் முதலிய
நூல்களிலும் எவ்வளவு பழக்கம் உண்டென்பதைத் தியாகராச செட்டியார்
சொல்லக் கேட்டதோடு, நானே நேரில் உணர்ந்தும் இருக்கிறேன். செட்டியார்
கும்பகோணம் காலேஜிற்கு வருவதற்கு முன் சில காலம் கோபால ராவ்
காலேஜ் வகுப்புக்களில் தமிழ்ப் பாடம் நடத்தி வந்தார். செட்டியாருடைய
திறமையை உணர்ந்து வருவித்துக் காலேஜில் வேலை செய்வித்தவரும் அவரே.

      தளராத ஊக்கத்துடன், மேற்கொண்ட வேலையை நிறைவேற்ற
வேண்டுமென்பது அவர் கொள்கை. அக்கொள்கைக்கு ஆதாரமாக விளங்கும்.

      “அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
       பெருமை முயற்சி தரும்”

      என்ற குறளை அவர் தம் புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொள்ளுவது
வழக்கம்.