இளமைக் கல்வி 55

      பெருமை உடையவனென்பது அதன் பொருள். உபாத்தியாயரது கைக்
கோலின் அடியைப் பெறாமல் தடவுதலை மாத்திரம் பெறுவது ஒரு தனிப்
பெருமை யல்லவா?

      சில சமயங்களில், ‘நாமே இன்று முதலில் வந்து விட்டோம்’ என்ற
பெருமிதத்தோடு ஒரு பிள்ளை தன் துணைக்கு வந்த பாட்டியோடு
பள்ளிக்கூடத்தில் நுழைவான். ஆனால் இவனுக்கு முன்பே ஒருவன் அங்கே
இருப்பான். இருட்டில் அவன் இருப்பது இவனுக்குத் தெரியாது. ஆனாலும்
தான் முன் வந்ததாக எண்ணி இவன் சந்தோஷப்படக் கூடாதென்னும்
நினைவினால் அங்கிருப்பவன் இவன் புகுந்தவுடன் சிறிது கனைப்பான்.
அப்போது இவனுடைய மகிழ்ச்சி எங்கோ பறந்து போய்விடும்.

      பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் ஸ்தானத்தில் இருந்தது.
பனையேடுதான் புஸ்தகம். எழுத்தாணியே பேனா. உபாத்தியாயர் எழுதித் தரும்
ஏட்டுச் சுவடியிலிருந்து முதலில் நெடுங்கணக்கை (அரிச்சுவடியை)க் கற்றுக்
கொள்வான் மாணாக்கன். அப்பால் எண் சுவடி முதலிய சுவடிகள் பெற்றுப்
படிப்பான். ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் தெரிந்து
கொள்வதற்குப் பல நாளாகும். சுவடியைப் பிரித்து ஒழுங்காகக் கட்டுவதற்குக்
கூடப் பழக்கம் வேண்டும். பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்கம் உண்டாக
உபாத்தியாயர் ஓர் ஓலையில் எழுதித் தருவார். பிள்ளைகள் அதே மாதிரி
எழுதிப் பழகுவார்கள். அந்த மூல ஓலைக்குச் சட்டம் என்று பெயர்.

      ஏட்டுச் சுவடிகளில் மஞ்சள், ஊமத்தையிலைச்சாறு, வசம்புக்கரி
முதலியவற்றைத் தடவிப் படிப்பது வழக்கம், எழுத்துக்கள் தெளிவாகத்
தெரிவதற்கும் பூச்சிகள் வராமல் இருப்பதற்கும் அவ்வாறு செய்வார்கள். ஏட்டுச்
சுவடிகளுக்குக் குறிப்பிட்ட அளவு ஒன்றும் இல்லை. வெவ்வேறு அளவில்
அவை இருக்கும். சுவடிகளில் ஒற்றைத் துவாரம் இருக்கும். ஒரு நூற் கயிற்றைக்
கிளிமூக்கு என்ற ஒன்றில் முடிந்து சுவடியின் துவாரத்தின் வழியே செலுத்தி
அதைக் கட்டுவார்கள். பனையோலையை நரம்போடு சேர்த்துச் சிறுசிறு
துண்டுகளாக நறுக்கிக் கிளி மூக்குகளாக உபயோகப் படுத்துவார்கள்.
கிளிமூக்கிற்குப் பதிலாகப் பொத்தானையோ, துவாரம் பண்ணின செம்புக்
காசையோ, சோழியையோ முடிவதும் உண்டு.

      ஏடுகளின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வெற்றேடுகள் சில
சேர்த்திருப்பார்கள்.