பலவகைக் கவலைகள் 593

      சோதித்து உழைத்து ஆராய்ந்து நச்சினார்க்கினியர் உரையுடனே தான்
சாமிநாதையர் பதிப்பித்து வருகிறார். அந்த நூல் வெளிவந்தால் தமிழ்
நாட்டுக்கு மிக்க உபகாரமாக இருக்கும்” என்னும் கருத்து அமையத் தம்
கையெழுத்திட்டு ஒரு கடிதம் எழுதி அதை ஹிந்து பத்திரிகையில் 5-8-1886
ஆம் தேதியில் வெளிவரச் செய்தார்.

தாமோதரம் பிள்ளை

      கும்பகோணத்தில் இருந்து வந்த சி.வை. தாமோதரம் பிள்ளை பிறகு
புதுக்கோட்டையில் ஜட்ஜ் உத்தியோகம் பெற்று அங்கே சென்றார்.
அங்கிருந்தபடியே இலக்கண விளக்கம், கலித்தொகை என்னும் இரண்டையும்
பதிப்பித்து வந்தார். சீவகசிந்தாமணிப் பிரதியை நான் வாங்கிக்
கொண்டதிலிருந்து அவருக்கு மனத்துள் சிறிது வருத்தம் இருந்ததென்று
குறிப்பாகத் தெரிந்தது. தாமும் சிந்தாமணியைப் பதிப்பிக்கப் போவதாகச்
சிலரிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தாரென்றும் தெரிந்தது. ‘யார் என்ன
செய்தாலும் சரி; நான் மேற்கொண்ட காரியத்தை இடையில் நிறுத்தப்
போவதில்லை!’ என்ற துணிவோடு சிந்தாமணிப் பதிப்பை நடத்தி வந்தேன்.
அதில் ஈடுபட ஈடுபடச் சிலரால் நேரும் இடையூறுகளை அறவே மறந்துவிடும்
நிலை எனக்கு ஏற்பட்டது.

      அவ்வப்போது சில அன்பர்கள் இத்தனை பிரதிகள் எடுத்துக்
கொள்கிறோமென்றும், இத்தனை ரூபாய் அனுப்புகிறோமென்றும் தெரிவித்து
ஊக்கமளித்தனர். ஊற்று மலை ஜமீன்தாராகிய ஸ்ரீ ஹிருதயாலய மருதப்பத்
தேவர் தாம் நூறு ரூபாயனுப்புவதாக வாக்களித்தார்.

சென்னைப் பிரயாணம்

      கோடை விடுமுறைக்குப் பின் கும்பகோணத்திற்கு வந்த நான்
அங்கிருந்தபடியே பதிப்பை நடத்திக் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்தபடி
வேலை வேகமாக நடைபெறவில்லை. அடிக்கடி இராமசுவாமி முதலியார் கடிதம்
எழுதுவார். “நீங்கள் இங்கே வந்திருந்து நடத்தினால் வேலை துரிதமாக
நடைபெறும்” என்று அவர் ஒருசமயம் எழுதினார். ஆகையால் கிறிஸ்துமஸ்
விடுமுறையில் மீண்டும் சென்னைக்குச் செல்ல ஏற்பாடு செய்தேன்.

கேள்வியுற்ற செய்தி

      டிசம்பர் மாத இறுதியில் நான் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்.
அங்கே போனவுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில்,
யாரோ ஒருவர் சிந்தாமணியைப் பதிப்பித்து