598என் சரித்திரம்

      அந்த வார்த்தைகளைக் கேட்டபோது எதிர்பாராத பெரிய லாபம்
கிடைத்தது போல எனக்குத் தோற்றியது. “வேலையை விட்டதைப் பற்றிக்
கவலை வேண்டாம். இப்போது நடந்து வரும் சிந்தாமணிப் பதிப்பிற்கு
உங்களைப் போன்ற அன்பர் ஒருவருடைய உதவி இன்றியமையாதது.
ஆகையால் நீங்கள் இங்கேயே இருந்து இதைக் கவனித்துக் கொள்ளலாம்.
புஸ்தகங்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் ஜாக்கிரதையாக நீங்கள்
பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று, சொல்லவே அவர் மிக்க மகிழ்ச்சியுடன்
உடன்பட்டார். சிந்தாமணி சம்பந்தமான சில வேலைகளை அவரிடம்
ஒப்பித்துவிட்டுக் கவலை இல்லாமல் நான் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

பெற்றோர் அடைந்த ஆறுதல்

      என் கடிதத்தால் ஆறுதல் உற்றிருந்தாலும் என்னை நேரே கண்ட
பிறகுதான் என் பெற்றோர் முழு ஆறுதலை அடைந்தார்கள். “சௌக்கியமாக
வந்தாயா?” என்று ஆவலோடு என் தாயார் என்னை எதிர்கொண்டபோது
அவருடைய தொனியாலே எவ்வளவு தூரம் அவர் கவலையுற்றிருக்கக் கூடும்
என்பதை உணர்ந்தேன். “புஸ்தகம் பூர்த்தியாக இன்னும் நாளாகும்
போலிருக்கிறது” என்று என் தந்தையாரிடம் சொன்னேன். “எவ்வளவு
நாளானாலும் ஆகட்டும். பாதகமில்லை. நீ ஜாக்கிரதையாகத் திரும்பி வந்தாயே
அதுவே போதும்” என்று சொல்லித் தமக்கிருந்த கவலையைக் குறிப்பால்
தெரிவித்தார்.

வேறு பதிப்பு

      திருவாவடுதுறையிலிருந்து சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் எனக்கு,
“யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னையா என்பவர் சிந்தாமணியை
நச்சினார்க்கினியருரையோடு பதிப்பித்து வருவதாகவும், அது முடிந்தவுடன்
அனுப்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். சி.வை.தாமோதரம் பிள்ளை
மடத்திலிருக்கும் சிந்தாமணிப் பிரதி வேண்டுமென்று கேட்டுக்
கொண்டமையால் கல்லிடைக் குற்ச்சியிலிருந்த சின்னப் பண்டாரத்தின் பிரதியை
வருவித்து அனுப்பியிருக்கிறோம்” என்று ஒருவர் முகமாகச் சொல்லி
அனுப்பினார்.

என் உறுதி

      சிந்தாமணிப் பதிப்பில் எனக்கு இருந்த பற்று வரவர வன்மையுற்றது.
எப்படியாது பதிப்பை நிறைவேற்றி விடுவதென்று உறுதி கொண்டேன். நீண்ட
விடுமுறைகளில்