606என் சரித்திரம்

      அச்சிட்டவர்களால் சேர்க்கப்பட்டதென்பதும் எனக்குத் தெரிய வந்தன.

நினைத்ததும் நடந்ததும்

      சிந்தாமணிப் பதிப்பு நடக்கையில் எனக்கு எவ்வகையிலேனும் உதவி
செய்ய வேண்டுமென்ற எண்ணத்தினால் பூண்டி அரங்கநாத முதலியார்
முயன்று நாமகளிலம்பகத்தை, பி. ஏ. பரீக்ஷைக்குப் பாடமாக வைக்கச் செய்தார்.
அதைத் தனியே நான் அச்சிட்டு வெளியிட்டால் பல பிரதிகள்
செலவாகுமென்றும், அதனால் எனக்கு ஓரளவு பொருள் வருவாய்
ஏற்படுமென்றும் அவர் எண்ணினார். நான் கும்பகோணத்தில் இருந்தமையால்
இந்தச் செய்தி உடனே எனக்குத் தெரியவில்லை காலேஜ் பாட
புத்தகங்களுக்கும் ஹைஸ்கூல் பாட புத்தகங்களுக்கும் உரையெழுதிப்
பதிப்பித்து விற்றுவரும் முயற்சியில் சோடசாவதானம் சுப்பராய செட்டியார்
ஈடுபட்டிருந்தார். அங்கங்கே உள்ள நண்பர்கள் மூலமாகப் பள்ளிக் கூடப்
பிள்ளைகளை வாங்கும்படி செய்து பிரதிகளை விற்று வந்தார். இந்த விஷயமாக
அவர் தியாகராச செட்டியாருக்கும் பிறகு எனக்கும் கடிதங்கள் எழுதுவார்.
நானே புத்தகங்களை வருவித்துப் பல பள்ளிக்கூடங்களிற் சொல்லி
மாணாக்கர்களை வாங்கச்செய்வேன். சிந்தாமணிப் பதிப்புக்கு அவர் ‘புரூப்’
பார்த்து உதவி செய்து வந்தார். அக்காலத்தில் நாமகள் இலம்பகத்தை
யூனிவர்ஸிடியார் பாடமாக வைத்தது தெரிந்ததும் அவர் அதனைத் தனியே
அச்சிட்டு எனக்குத் தெரிவியாமலே வெளிப்படுத்தி விட்டார் இப்படி அவர்
செய்ததில் எனக்கு மிகுதியான வருத்தம் உண்டாயிற்று. அரங்க நாத
முதலியாருக்கு இது தெரிந்தபோது, “நான் ஒன்று நினைக்க இது வேறு விதமாக
முடிந்ததே” என்று அவர் வருந்தினார். அது முதல் சுப்பராய செட்டியாரைப்
‘புரூப்’ பார்க்க வேண்டாமென்று சொல்லி விட்டேன்.

      சிந்தாமணிப் பதிப்பைப் பற்றி அவ்வப்போது சுதேசமித்திரனில் என்
நண்பரும் விவேகசிந்தாமணிப் பத்திரிகையின் ஆசிரியருமான சி. வி.
சாமிநாதையரும், யாழ்ப்பாணம் விசுவநாத பிள்ளையென்பவரும் இன்ன இன்ன
பாகங்கள் நடக்கின்றனவென்று எழுதி வருவார்கள். பத்திரிகையின் மூலமாக
உணர்ந்த பல அபிமானிகள் அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதி விசாரித்து
வந்தனர். முன்னமே கையொப்பம் செய்த ஊற்றுமலை ஜமீன்தாராகிய
ஹிருதயாலய மருதப்பத் தேவர் நூறு ரூபாய் அனுப்பினார். பாலைக் காட்டில்
நகரசபைத் தலைவராக இருந்த ராவ்பகதூர் பா. ஐ. சின்னசாமி பிள்ளை
என்பவர் அடிக்கடி, “இப்போது எது வரையில் ஆகியிருக்கிறது?” என்று
எழுதுவார்.