616என் சரித்திரம்

புறப்பாடு

      இந்த அலைச்சலினால் அன்று முழுவதும் நான் ஆகாரம் செய்து
கொள்ளவில்லை. ஆனாலும் என் கையில் இருந்த பைண்டான சிந்தாமணிப்
பிரதியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து ஆனந்தமடைந்து கொண்டிருந்தேன்.
ரெயில்வே ஸ்டேஷனில் ஸி.எஸ்.எம்.பள்ளிக்கூடத்துத் தமிழ்ப் பண்டிதராகிய
பு.மா.ஸ்ரீநிவாஸாசாரியரென்பவர் என்னைச் சந்தித்துச் சிந்தாமணி நிறைவேறியது
பற்றிப் பாராட்டினார். “இந்தத் தேசத்தில் கம்பெனியாருடைய பிரதிநிதியாக
இருந்த கிளைவ் துரை தம்முடைய எதிரிகளை அடக்கி வென்று பல
பிரதேசங்களைக் கம்பெனியாருக்கு உரியமையாக்கி மீட்டும் தம் நாடு
செல்லும்போது கம்பெனி உத்தியோகஸ்தர் யாவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு
அவரை வழியனுப்பினார்களாம். உங்களைக் காணும்போது எனக்கு அவருடைய
ஞாபகம் வருகிறது” என்று சொல்லித் தம் உவகையைப் புலப்படுத்தினார்.

அரங்கநாத முதலியாருக்கு எழுதிய பாடல்கள்

      மறுநாட் காலையில் கும்பகோணம் வந்து இறங்கினேன். என்னுடைய
அன்பர்களெல்லாம் சிந்தாமணி பூர்த்தியான சந்தோஷத்தை விசாரித்தார்கள்.
அடுத்த நாள் எனக்கு அரங்கநாத முதலியார் ஞாபகம் வந்தது. ‘மறுநாள்
நம்மை வரச் சொன்னாரே? அவரைப் பாராமல் வந்து விட்டோமே; என்ன
நினைப்பாரோ?’ என்று நினைந்து விஷயத்தை விளக்கி அவருக்கு ஒரு கடிதம்
எழுதத்தொடங்கினேன்: கடிதம் பாடல்களாகவே அமைந்தது.

      1, “குலத்தினாற் புலவர் மெச்சும் குணத்தினாற் பலநூ லாயும்
           புலத்தினாற் றிசைய ளக்கும் புகழினாற் புரையில் வாய்மை
        வலத்தினா லடுத்தோர்த் தாங்கும் வன்மையால் வன்மை மிக்க
           நலத்தினாற் றிகழ ரங்க நாதமா முகிலீ தோர்க.”

      (புலம் - அறிவு. புரை - குற்றம், தாங்கும் - ஆதரிக்கும், நலம் -
குணம்.)

      2. “திருத்தகுமா முனிவனருள் தெள்ளியசிந் தாமணியைத்
           திருவி லாதேன்
        வருத்தமிக வாய்ந்தச்சிற் பதிப்பித்து முடித்தபெரு
           மகிழ்வை யோதும்
        கருத்துடையே னாகியந்த நூலையுங்கைக் கொடுநின்னைக்
           காண வந்தும்
        பெருத்தவபாக் கியமென்னைத் தடுத்தமையால் நினைக்காணப்
           பெற்றி லேனால்.”