628என் சரித்திரம்

      அமைத்துள்ள மூலமும் பிறவும் ஒன்றாகச் சேர்ந்து கலந்திருந்தன.
அவர் செய்யும் அன்வயத்தினால் பாட்டின் உருவம் இன்னது தானென்று
நிச்சயிப்பது கஷ்டமாக இருந்தது. பின்னும் சில பிரதிகள் கிடைத்தால்
ஒப்பிட்டுப் பார்க்கலாமென்று எண்ணினேன்.

சென்னைப் பிரயாணம்

      அச்சமயத்தில் தியாகராச செட்டியார் தாம் இயற்றிய மருந்து வெண்பா
மாலை, திருச்சிற்றம்பல வெண்பா அந்தாதி, திருவொற்றியூர்பாதி
திருவாரூர்பாதி அந்தாதி என்னும் மூன்று பிரபந்தங்களை அனுப்பி அச்சிட
வேண்டுமென்று எழுதியிருந்தார். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கு அப்போது
கண்ணின் நோய் அதிகரித்து மிக்க துன்பம் உண்டாக்கியது. சென்னையிலிருந்து
‘பிராக்மன்’ என்ற ஆங்கிலக் கண் வைத்தியர் வந்து கண்ணைப்
பரிசோதித்தார். தேசிகருடைய தேகத்தில் வன்மை குறைந்து விட்டதென்று
அவர் சொல்லியதோடு, ஆதீன சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்வதாயின்
முன்னாடியே செய்து விடுவது நலமென்றும் பெரிய காறுபாறு தம்பிரானிடம்
தனித்துக் கூறினார். சின்னப் பட்டத்தின் பொருட்டுச் சென்னையிலிருந்து வந்து
படித்துக் கொண்டிருந்த அருணாசலத் தம்பிரானென்பவரை யாவரும்
பட்டத்துக்குட்டியென்று வழங்கி வந்தனர். அவருக்கு உடனே சின்னப் பட்டம்
கட்டி விடலாமென்றெண்ணிச் சுப்பிரமணிய தேசிகர் நல்ல நாள் பார்த்துப்
பத்திரிகையும் எழுதச் செய்தார். சென்னைக்குச் சென்று அப்பத்திரிகையை
அச்சிட்டு வர வேண்டு மென்று எனக்குக் கட்டளையிட்டார். அப்போது
கிறிஸ்துமஸ் விடுமுறையாக இருந்தமையால் அங்ஙனமே செய்வதாக ஒப்புக்
கொண்டேன். தியாகராச செட்டியாருடைய பிரபந்தங்களை அச்சிடுவதற்கும்
பத்துப்பாட்டை அச்சிடும் முயற்சிக்கும் சென்னைப் பிரயாணம் அனுகூலமாக
இருக்குமென்று நினைத்தேன்.

      நல்ல வேளை பார்த்து என்னைத் திருவாவடுதுறையிலிருந்து தேசிகர்
அனுப்பினார். எனக்கு மாத்திரம் ஏதோ உள்ளுக்குள்ளே ஒரு பயங்கரமான
குறிப்புத் தோற்றியது. அவருடைய பலஹீனத்தைக் கண்டு வருந்தினேன். ஒரு
முறை விடை பெற்றுக்கொண்டு போனவன் மறுபடியும் வந்து அவரைப்
பார்த்துவிட்டுச் சென்றேன்.

இராசகோபாலாசாரியர் செய்த உதவி

      சென்னையில் இராமசுவாமி முதலியார் பங்களாவில் தங்கித் தியாகராச
செட்டியாருடைய பிரபந்தங்களையும் திருவாவடுதுறைச் சின்னப் பட்டப்
பத்திரிகையையும் அச்சுக்குக் கொடுத்தேன்.