68என் சரித்திரம்

      கோவிலில் பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வந்தார். அவரிடம் நான் ஒரு
வருஷம் படித்தேன்.

      கிருஷ்ண வாத்தியார் கிழவர். அவரிடம் பல பிள்ளைகள் படித்தார்கள்.
அவர் தமிழ் இலக்கியங்களில் நல்ல பழக்கமுடையவர். ஆத்திசூடி, மூதுரை,
மணவாள நாராயண சதகம் முதலிய சதகங்கள், இரத்தினசபாபதி மாலை,
நாலடியார், குறள் முதலியவற்றையும் கணக்கையும் அவரிடம் கற்றேன்.
நாலடியார் குறளென்னும் நூல்கள் அவ்வளவு இளம் பிராயத்தில் நன்றாகப்
பொருளறிந்து கற்பது சாத்தியமன்று. ஆயினும் அவற்றை மனப்பாடம்
செய்யும்படி கிருஷ்ண வாத்தியார் மாணாக்கர்களை வற்புறுத்துவார்.
எழுத்தாணியால் ஏடுகளில் எழுதியும் கறடா (மட்டி)க் காகிதத்தில் கொறுக்காந்
தட்டைப் பேனாவால் எழுதியும் திருத்தமாக எழுதிக் கற்றுக் கொண்டோம்.
கையெழுத்து நன்றாக இராவிட்டால் குண்டெழுத்தாணியால் கட்டை விரலில்
உபாத்தியாயர் அடிப்பார். அவரிடம் படித்தவர் யாவரும் எழுதுவதில் நல்ல
பழக்கத்தைப் பெற்றனர்.

      அவரிடம் படித்த நூல்களெல்லாம் எனக்கு மனப்பாடமாயின. வீட்டிலும்
என் தந்தையார் தினந்தோறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார். நாளுக்கு
ஐந்து செய்யுட்கள் பாடம் பண்ணி அவரிடம் ஒப்பிக்க வேண்டும்.
இல்லையெனில் அவரது தண்டனைக்கு உட்பட நேரும்.

ஏறாத தெலுங்கு

      எனது கல்வி விஷயத்தில் என் தந்தையாருக்கு மனத்துக்குள் கவலை
இருந்து வந்தது. என்னையும் சங்கீதத் துறையில் பழக்க வேண்டுமென்றே அவர்
நினைத்திருந்தார். அக் காலத்தில் சங்கீத வித்வான்கள் யாவருக்கும் தெலுங்கு
 மொழியிற் பழக்கம் இருந்தது. தமிழ், தெலுங்கு, ஸம்ஸ்கிருதம் என்னும் மூன்று
பாஷைகளிலும் உள்ள கீர்த்தனங்களை அவர்கள் பாடுவார்கள்.

      சங்கீதப் பயிற்சிக்குத் தெலுங்கு உதவியாக இருக்குமென்ற
எண்ணத்தின்மேல் என் தந்தையார் கிருஷ்ண வாத்தியார் பள்ளிக் கூடத்தை
விட்டு என்னை வேறொரு பள்ளிக்கூடத்திற் சேர்த்தார் பெருமாள்
கோவிலுக்குத் தெற்கேயுள்ள காமாக்ஷியம்மன் கோவிலில் அந்தப் பள்ளிக்கூடம்
இருந்தது. அதன் தலைவராகிய முத்து வேலாயுத பண்டாரமென்னும் வீர
சைவர் தெலுங்கும் கற்பித்து வந்தார். அவரிடம் தெலுங்கு கற்கத் தொடங்கி,
குணிதம்