பெருங்குளம் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு பெருங்குளத்தை அடைந்து அங்குள்ள செங்கோல் மடத்துக்குப் போய் மடாதிபதியைக் கண்டேன். நான் போனபொழுது அவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். மிக்க அன்போடு பேசி என்னை உபசரித்தார். “தங்களுக்கு யமகந்திரிபுகளில் நல்ல தேர்ச்சியுண்டு என்று கேட்டிருக்கிறோம். சிலவற்றைச் சொல்ல வேண்டும்” என்றார். எல்லாவரையும் வசப்படுத்தும் கலையாகிய சங்கீதத்திலே இன்பம் காணும் அவர் மிகவும் சிரமப்பட்டுப் பொருள் தெரிதற்குரிய யமகந்திரிபுகளிலும் இன்பங் காணும் இயல்பினராக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. அவர் விரும்பிய பொருள் என்னிடம் நிரம்ப இருந்தது. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திரிபுயமக அந்தாதிகளிலிருந்து பல பாடல்களைச் சொன்னேன். 3 எழுத்து முதல் 13 எழுத்துக்கள் வரையில் யமகமாக அமைந்த செய்யுட்களையும் அவற்றின் பொருளையும் சொன்னேன். கேட்டுக் கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். நான் வந்த காரியத்தை அறிந்து தம்மிடமுள்ள ஏடுகளெல்லாவற்றையும் நான் பார்க்கும்படி செய்தார். பல பிரபந்தங்களும் புராணங்களும் அச்சிட்ட நூல்களும் இருந்தன. குறுந்தொகை மூலம் ஒரு பிரதி இருந்தது. அன்று முழுவதும் அங்கே தங்கி அவருடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தேன். அவ்வூரிலுள்ள ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று அதன் சிறப்பை அவர் எடுத்துரைத்தார். அங்கே உக்கிரபாண்டியர் அரசாட்சி செய்தாரென்றும், அவராற் பூசிக்கப் பெற்றமையின் அவ்வூர்ச் சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர் என்னும் திருநாமம் வழங்குகிறதென்றும் அறிந்தேன். அந்தப் பாண்டியர் முன்னிலையில் நக்கீரனார் முதலிய சங்கப் புலவர்கள் கூடிய இடத்தில் திருக்குறள் அரங்கேற்றம் நடைபெற்றதென்றும் அங்ஙனம் நடந்த இடம் அதுவேயென்றும் கூறி, அதற்கு அடையாளமாகச் சிவாலயத்தில் 49 புலவர்களின் வடிவமும் உக்கிர பாண்டியர் வடிவமும் அமைந்துள்ள இடத்தை அவர் காட்டினார். ‘இங்கே அவர்கள் இருந்தார்களோ இல்லையோ, தமிழ்ப் புலவர்களைத் தெய்வத்தோடு ஒன்றாக வைத்துப் போற்றும் வழக்கம் இந்த நாட்டில் இருப்பதை நாம் பாராட்டவேண்டும’ என்று நான் எண்ணினேன். ஆறுமுக மங்கலம் பெருங்குளத்துக்குக் கிழக்கேயுள்ள ஆறுமுக மங்கலவாசியும் தூத்துக்குடி கால்டுவெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதருமான குமார |