ரைப் பார்த்துப் பேசிப் பழகவேண்டுமென்ற விருப்பம் எனக்கு நெடுநாளாக இருந்தது. திருநெல்வேலிப் பக்கங்களில் பிரயாணம் செய்த போதெல்லாம் அப்படியே ஊற்றுமலை போய்ப் பார்க்க எண்ணியிருந்தும் முடியவில்லை. ஊற்றுமலைக்குப் போவதையே முக்கிய நோக்கமாக வைத்துக் கொண்டு புறப்பட்டாலொழிய அந்தக் கருத்து நிறைவேறாதென்று தோன்றிற்று. ஆதலால் மிதிலைப்பட்டியிலிருந்து வந்த சில நாட்களுக்குப் பிறகு ஊற்றுமலையை நோக்கிப் புறப்பட்டேன். விக்கிரமசிங்கபுரம் அச்சமயம் நான் ஏடு தேடாத இடங்களுக்கும் சென்று பார்த்து வரலாமென்று எண்ணியே புறப்பட்டேன். ஆகையால் நேரே விக்கிரமசிங்கபுரம் சென்றேன். சிவஞான போதத்திற்குத் திராவிட மகாபாஷ்யம் இயற்றிய திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞான முனிவர் உதித்த அவ்வூரில் அவர் பிறந்த வீடு இருக்கிறது. அங்கே எனக்கு உபயோகப்படும் நூல்கள் எவையேனும் கிடைக்கலாமென்று நினைத்தேன். போய்ப் பார்த்தபோது ஒன்றும் கிடைக்கவில்லை. அவ்வீட்டில் ஒருவரைச் சந்தித்தேன். அவர் அவ்வூர்ப் பள்ளிக் கூடத்து உபாத்தியாயர். அவரை எந்த ஊரென்று விசாரித்தபோது, “கடையநல்லூர்” என்று சொன்னார். “அப்படியா? சந்தோஷம். உங்கள் வீட்டிலே பழைய தமிழ் ஏட்டுச் சுவடிகள் உண்டா?” என்று கேட்டேன். வீண் அபவாதம் “மிகுதியாக இருந்தன. எல்லாவற்றையும் ஒருவர் கொண்டு போய் விட்டார்” என்று அவர் சொன்னார். “யார் அவர்?” என்று மிக்க ஆவலோடு கேட்டேன். “கும்பகோணம் சாமிநாதையர் கொண்டு போய் விட்டார்” என்றார் அவர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். “அவர் என்ன சுவடிகளைக் கொண்டு போனார்?” “எவ்வளவோ சுவடிகள் இருந்தன. எல்லாவற்றையும் அவர் கொண்டு போய் விட்டார்.” |