கம்பர் செய்தியும் ஸேதுபதி ஸம்மானமும் 719

      என்ற பாட்டில் வரும் வயிரவபுரம் அந்த ஊராகத்தான் இருக்க
வேண்டும். அவர் குறிப்பித்த காளி கோயில் இன்னும் இருக்கிறது. அதை
அங்காளியம்மன் கோயிலென்று வழங்குகிறார்கள்.

வெண்ணெய் நல்லூர்

      அப்பால் வெண்ணெய் நல்லூருக்குப் போனேன். அதைச் சடையப்ப
பிள்ளை கிராமமென்றும் வழங்குவார்கள்; அறுபது வேலி யுள்ளது. அங்கே ஒரு
குளம் உண்டு அதன் கரையில் விஷ்ணுவின் விக்கிரகம் இருந்தது.

      “மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
       வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே”

      என்ற பாட்டில் கூறப் பெறும் வாவி அதுதானென்று சிலர் கூறினர்.

      கதிராமங்கலத்திலுள்ள சிவாலயத்திற்குப் போனேன். அங்கே உள்ள
ஒரு விநாயகரைத் தரிசிக்கையில் பீடத்தில் ஏதோ எழுதி யிருப்பதைக் கண்டு
கவனித்தேன். “வெண்ணெய் நல்லூர்ப் பிள்ளையார்” என்று
பொறிக்கப்பட்டிருந்தது. மாயூரத்திலிருந்து தஞ்சைக்குச் செல்லும் சாலையில்
அவ்விக்கிரகம் இருந்ததென்றும் பாதுகாப்பின் பொருட்டு அதனைக்
கொணர்ந்து ஆலயத்தில் வைத் தார்களென்றும் கேள்வியுற்றேன்.

      எல்லாவற்றையும் கண்டும் கேட்டும் இன்புற்றுக் கம்பரது நினைவிலே
ஊறியவனாய்க் கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தேன். கம்ப ராமாயணத்தைப்
படித்துப் படித்து இன்புற்ற எனக்குக் கம்பர் வரலாற்றைப் பற்றிய புதிய
செய்திகள் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

      எனக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகளில் காணியாளர் அகவல் என்பது
ஒன்று. அதனால் சோழ நாட்டு வேளாளர்களுடைய கோத்திரங்கள் 64 என்பது
தெரிய வந்தது. அவற்றுள் சடையப்ப நயினார் கோத்திர மென்பது ஒன்று.
சோழ நாட்டு வேளாளர்களுக்கு நயினாரென்ற பட்டம் உண்டு. சடையப்ப
வள்ளலது பரம்பரை யினரது கோத்திரமென்றே அதைக் கருதுகிறேன்.

      கம்பரைப் பற்றியும் அவர் ஊரைப் பற்றியும் வேறிடங்களைப் பற்றியும்
நான் தெரிந்து கொண்ட இச்செய்திகளைத் திருவாவடு துறை ஆதீன
கர்த்தராகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்குச் சொன்னேன். அருங்கலை
விநோதராகிய அவர் கேட்டு மிக்க சந்தோஷத்தை அடைந்தார்.