மூன்று துக்கச் செய்திகள் 731

      மென்பது என் விருப்பம். கருவூருக்குப் போயிருந்தபோது அங்குள்ள
வக்கீல்களிற் சிலர், “எங்கள் கட்சிக்காரர்களிற் சிலபேர் வள்ள லென்னும்
பட்டப் பெயருடையவர்களாக இருக்கிறார்கள்” என்ற செய்தியைத்
தெரிவித்தார்கள். பத்துப் பாட்டிலும் புறநானூற்றிலும் கடையெழு வள்ளல்களின்
பெயர்களும் வரலாறுகளும் சொல்லப் பெற்றுள்ளன; ஒரு கால் அவர்கள்
பரம்பரையினராக இருக்கக் கூடுமென்று எண்ணினேன்.

வெ. ப. சுப்பிரமணிய முதலியார்.

      கும்பகோணத்திற்கு வந்து புறநானூற்று அகராதியை முடித்தேன்.
அக்காலத்தில் ஸ்ரீமான் ராவ்சாகிப் வெ.ப.சுப்பிரமணிய முதலியார்
அப்பக்கத்தில் மிருக வைத்திய ஸூபரிண்டெண்டெண்டாக இருந்தார்.
அவருடைய பழக்கம் எனக்கு உண்டாயிற்று. அவருடைய தமிழன்பும்
கம்பராமாயணப்பற்றும் எங்களுடைய நட்பை வன்மை பெறச் செய்தன
கும்பகோணத்துக்கு அருகில் அவர் முகாம் போடும் பொழுதெல்லாம் அவரைக்
கண்டு பேசிச் சல்லாபம் செய்து வருவேன். தாம் இயற்றும் செய்யுட்களை
எனக்குச் சொல்லிக் காட்டி வருவார். ஆங்கிலம் படித்துத் தக்க
உத்தியோகத்திலிருக்கும் ஒருவருக்குத் தமிழில் அவ்வளவு ஆழ்ந்த அன்பு
இருந்தமை முதலில் எனக்கு வியப்பை உண்டாக்கியது.

      காலேஜில் என் கடமையை ஒழுங்காகக் கவனித்து வந்தேன்.
கோபாலராவுக்குப் பிறகு பிரின்ஸிபாலாக வந்தவர்களெல்லாம் அவரைப்
போலவே என்பால் அன்பு காட்டி வந்தார்கள். சிந்தாமணி பதிப்பிக்கும்
காலத்தில் பிரின்ஸிபாலாக இருந்த பில்டெர்பெக் துரை எனக்கு அதிக
ஊக்கத்தை உண்டாக்கினார். கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலை முதலிய
இடங்களுக்கு அந்நூலை அனுப்பி அவர்களை எனக்கு நன்றியறிவோடு கடிதம்
எழுதும்படி அவர் செய்தார்.

நடுவேனிற் கனவு

      புறநானூற்றுப் பதிப்பு நடந்து வந்த காலத்தில் காலேஜில்
பிரின்ஸிபாலாக இருந்தவர் ஜே.ஹெச். ஸ்டோன் என்பவர், அவர் காலத்தில்
காலேஜில் பலவிதமான விசேஷங்கள் நடைபெறும். ஒரு முறை காலேஜ்
மாணாக்கர்களைக் கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகமாகிய ‘நடுவேனிற் கனவு’
(Midsummer Night’s Dream) என்பதைத் தமிழில் நடித்துக் காட்ட ஏற்பாடு
செய்தார். அந்நாடகத்தைக் காலேஜ் ஆசிரியராகிய நாராயணசுவாமி ஐயரென்