மூன்று துக்கச் செய்திகள் 733

      திருப்புகழ்ச் சுவடிகளைச் சிலர் வைத்திருந்தனர். அருணகிரி
நாதருடைய வாக்கிலே ஈடுபட்ட சுப்பிரமணிய பிள்ளை திருப்புகழ்ப்
பாடல்களைத் திரட்டி வெளியிடவேண்டுமென்று தீவிரமாக முயற்சி செய்யத்
தொடங்கினார். தாம் உத்தியோகம் பார்த்து வந்த இடங்களிலும் அவற்றைச்
சார்ந்த இடங்களிலும் விசாரித்து விசாரித்துத் திருப்புகழ்ப் பாடல்களைச்
சேகரித்தார். ஏடுகளைத் தொகுத்தார். பாடுபவர்களிடமிருந்து கேட்டு எழுதிக்
கொண்டார். எனக்குக் கிடைத்த சில சுவடிகளை அவரிடம் கொடுத்தேன்.
அவர் மிகவும் சிரத்தையுடன் தொகுத்து வந்தைதை அறிந்து அவர்பால்
எனக்குப் பற்றுதல் உண்டாயிற்று. அவர் அடிக்கடி கடிதம் எழுதுவார்.
திருப்புகழைப் பதிப்பிக்கத் தொடங்கிய பின்பு புரூபை எனக்கு அனுப்பி
வந்தார். நான் பார்த்துத் திருத்தி அனுப்புவேன். புறநானூறு பதிப்பித்து வந்த
காலத்தில் இந்தத் திருப்புகழ்க் கைங்கரியம் எனக்கு முருகப்பிரான்
தியானத்தால் உண்டாகும் பயனையும் நெஞ்சத் திண்மையையும் கிடைக்கச்
செய்தது.

மகாவைத்தியநாதையர் நிரியாணம்

      1893-ஆம் வருஷத்தில் மூன்று துக்க நிகழ்ச்சிகள் நேர்ந்தன. நந்தன
வருஷம் தை மாதம் 16-ஆம் தேதி (27-1-1893) மகா வைத்தியநாதையர் சங்கீத
உலகத்திலே தம் புகழுடம்பை நிலை நிறுத்திப் பூதவுடம்பை நீத்தார். அந்தச்
செய்தியை அறிந்தபோது என் தந்தையாரும் திருவாவடுதுறை ஆதீனத்
தலைவரும் நானும் பிறரும் அடைந்த வருத்தத்துக்கு முடிவில்லை. ‘இனி அந்த
மாதிரி சங்கீதத்தை வேறு எங்கே கேட்கப் போகிறோம்’ என்ற பேச்சுத்தான்
எல்லோரிடமும் எழுந்தது. சிவபக்தியும் பாஷா பயிற்சியும் ஒழுக்கமும் சங்கீதத்
திறமையும் ஒருங்கே பொருந்தி விளங்கிய அவரைப் போன்ற ஒருவர்
இந்நாட்டிற் பிறப்பது அரிது.
 

தந்தையார் இழந்தது

      அவ்வருஷம் செப்டம்பர் மாதத்தில் என் தந்தையாருக்கும் தாயாருக்கும்
தேக அசௌக்கியம் உண்டாயிற்று. இருவருக்கும் நோய் கடுமையாகவே
இருந்தது. இருவருடைய நிலையும் நம்பிக்கை தருவதாக இல்லை. என் தாயார்,
தந்தையாருக்கு முன் காலமாய் விடலாமென்று தோற்றியது. ஆனால் விதி
வேறு விதமாக இருந்தது. அக்டோபர் மாதம் 7-ம் தேதி டாக்டர் வழக்கம்
போல் வந்து இருவரையும் பார்த்தார். “தந்தையார் நிலை அபாயகரமாக
இருக்கிறது; அவரை மேல் மெத்தையிலிருந்து கீழே கொண்டு போவது நல்லது”
என்று டாக்டர் சொல்லவே அப்படியே