மூன்று துக்கச் செய்திகள் 735

      [நீறு - விபூதி. விழிமணிமாலிகை - ருத்திராட்ச மாலை. மையாரும்
மணிமிடறு - நீல நிறம் பொருந்திய மணி போன்ற திருக்கழுத்து]

      “பற்றலெங்கே செந்தமிழைப் பற்றிக்கற் றோர்பலர்பால்
       துற்றலெங்கே மீனாட்சி சுந்தரநல் லாரியன்பால்
       கற்றலெங்கே கற்றுக் கவலையொரீஇ யந்நிலையே
       நிற்றலெங்கே இன்றுவரை நீயருள்செய் யாவிடினே!”

      [துற்றல் - கல்வியை நுகர்தல். ஒரீஇ - நீங்கி]

      “அத்தா நினதுபிரி வல்லற் கடலழுத்திப்
       பித்தாக்கி யென்னைப் பெரிதும் வருத்துறுமால்
       எத்தானஞ் சென்றாய் இதுவோநின் தண்ணளியே
       சத்தான இன்பமுறு சங்கீத சாகரமே!”

      [அல்லற்கடல் - துக்க சாகரம். தானம் - இடம். சத்தான - நிலையான]

      “அன்போடு சிவபூசை யாற்று மிடத்தொடுநீ
       இன்போடு பாடி இருக்குமிட முந்தமியேன்
       துன்போடும் படிவார்த்தை சொல்லுமிடந் தானுமந்தோ
       என்போடு முள்ளுருக என்னை வருத்துறுமால்.”
 

      [ஆற்றும் - செய்யும். துன்பு ஓடும்படி]

      என் தந்தையாருக்குரிய ஈமக் கிரியைகளையெல்லாம் செய்து
முடித்தேன். அதுகாறும் என் தலையிலேறாமலிருந்த குடும்பச் சுமையை நான்
ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது. தந்தையார் காலமானதால்
உண்டான துக்கமும், புதிய பொறுப்பும் என்னுடைய தமிழ்ப் பணிக்குச்
சிறிதளவு தளர்ச்சியைக் கொடுத்தேன்.

அரங்கநாத முதலியார் பிரிவு

      தந்தையார் காலமான செய்தி தெரிந்து வருத்தம் தெரிவித்த அன்பர்கள்
பலர். பூண்டி அரங்கநாத முதலியார் அவர்களுள் ஒருவர். இரண்டு
மாதங்களுக்குப் பின் அந்த உபகாரியின் மரணத்தைக் குறித்தே வருந்தும்
துர்ப்பாக்கியமும் எனக்கு உண்டாயிற்று. 10-12-1893 இல் அவர் காலமானார்.
அச் செய்தி கேட்டுத் தமிழ் நாட்டிலுள்ளார் திடுக்கிட்டனர். தமிழ்ப் புலவர்கள்
மனங் கலங்கினர். பல வகையான ஸ்தாபனங்களில் அவர் தலைமை வகித்து
ஊழியம் புரிந்து வந்தார். அவருடைய