760என் சரித்திரம்

      அறிந்துகொண்ட செய்திகள் யாவும் ‘அரும்பதவுரையிலடங்கியவை’
என்னும் பகுதியில் உள்ளன. புறத்திரட்டினால் தெரிந்த குண்டலகேசிச்
செய்யுட்கள் சிலவற்றை அந்நூலைப் பற்றிச் சொல்லுமிடத்தில் சேர்த்திருந்தேன்.
அப் பகுதியைக் கண்ட அன்பர்கள், “இங்கிலீஷில் ‘என்ஸைக்ளோ பீடியா’
என்று ஒரு வகை அகராதி உள்ளது. அதைப் போல இருக்கிறது இது. இந்த
மாதிரி நீங்கள் ஒவ்வொரு நூலுக்கும் எழுதினால் கடைசியில் எல்லாவற்றையும்
சேர்த்து ஒரு புத்தகமாகப் போட்டு விடலாம்” என்றார்கள். அத்தகைய
பொருள் விளக்க அகராதி தமிழில் வேண்டுமென்ற ஆவல் இயல்பாகவே
எனக்கு உண்டு. அவ்வன்பர்கள் கூறிய பிறகு அந்த ஆவல் அதிகரித்தது.

      முதல் முதலாக நான் உரையெழுதிய நூல் மணிமேகலை. எனது உரை
எளிய நடையில் அமைந்தமை பற்றிப் பலர் பாராட்டினர். பல விஷயங்களை
விளக்குகின்றதென்று பலர் புகழ்ந்தனர். கிறிஸ்டியன் காலேஜில் தமிழாசிரியராக
இருந்த வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், “யான் இம் மணிமேகலைப்
பதிப்பைப்பற்றி முகமனா வொன்றும் எழுதுகின்றிலேன். மிகவும்
அற்புதமாயிருக் கின்றது. யான் விரும்பியாங்கே குறிப்புரையும் பிறரால் இது
வேண்டும் இது வேண்டாவென்று சொல்லப்படாதவாறு செவ்வனே
பொறித்திருக்கும் பெற்றிமையை யுன்னுந் தோறு மென்னுள்ளங் கழிபேருவகை
பூக்கின்றது. இப்போழ்தன்றே யெந்தஞ் சாமிநாத வள்ளலைக்குறித்துக் குடையும்
துடியும் யாமும் எம்மனோரும் ஆடிய புகுந்தாம். இன்னும் எம் மூரினராய்
நின்று நிலவிய நச்சினார்க்கினிய நற்றமிழ்ப்பெருந்தகை போன்று பன்னூற்
பொருளையும் பகலவன் மானப்பகருமாறு பைந் தமிழமிழ்தம் பரிவினிற்பருகிய
பண்ணவர் பெருமான் எந்தம் மீனாட்சிசுந்தர விமலன் நுந்தமக்கு வாணாள்
நீட்டிக்குமாறு அருள்புரிவானாக’ என்று எழுதினார்.

எனக்குக் கிடைத்த பட்டம்

      இப்படி நாள்தோறும் மணிமேகலை புகுவித்த மகிழ்ச்சியைத்
தெரிவிக்கும் கடிதங்களும் வார்த்தைகளும் என் பால் வந்து
கொண்டேயிருந்தன. 1899-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 7-ம் தேதி வெளிவந்த
‘விவேக திவாகரன்’ என்னும் ஒரு பத்திரிகையில் ‘ஆனந்தன்’ என்ற புனை
பெயரோடு ஓரன்பர் ‘பௌத்த சமயப் பிரபந்த பிரவர்த்தனாசாரியர்’ என்ற
தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். தலைப்பைப் பார்த்தவுடன் பௌத்த
சமய ஆசிரியர் ஒருவரைப் பற்றியது போலும் என்ற ஆவலோடு படிக்கத்
தொடங்கினேன். ஆனால் விஷயம் என்னைப் பற்றியதாக இருந்தது.