தமிழகமும் நிலமும்11

பெயர். திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும் ஊர் உள்ளது.
  
தோப்பு
 

             மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று
அழைக்கப்படும்.34 தோப்பின் அடியாகப் பிறந்த ஊர்களும் உண்டு. மந்தித்
தோப்பு என்னும் ஊர் நெல்லை நாட்டிலும், மான்தோப்பு இராம
நாதபுரத்திலும், நெல்லித் தோப்பு தஞ்சை நாட்டிலும், வௌவால் தோப்பு
தென்னார்க்காட்டிலும் விளங்குகின்றன.

சுரம்

    சுரம் என்பது காடு. தொண்டை நாட்டில் உள்ள திருச்சுரம் இப்பொழுது
திரிசூலம் என வழங்குகின்றது. அந்நாட்டில் உள்ள மற்றோர் ஊரின் பழம்
பெயர் திருவிடைச்சுரம். அது திருவடிசூலம் எனத் திரிந்துவிட்டது.35

வனம், ஆரண்யம்

    காட்டைக் குறிக்கும் வடசொற்களில் வனம்,36 ஆரண்யம் ஆகிய
இரண்டும்  சில ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. புன்னைவனம்,
கடம்பவனம், திண்டிவனம்37 முதலிய ஊர்ப்பெயர்களில் வனம்
அமைந்திருக்கக் காணலாம். வேதாரண்யம் என்ற பெயரில் ஆரண்யம்
விளங்குகின்றது.38

    இன்னும், தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்ப் பெயர்கள் தனி மரங்களின்
பெயராகக் காணப்படுகின்றன. கரவீரம் என்பது பாடல்பெற்ற
சிவஸ்தலங்களில் ஒன்று.39